சென்னை: முதுநிலை ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்குத் தேர்வு செய்யப்பட்ட பட்டதாரிகளின் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக டிஆர்பி வெளியிட்டுள்ள அறிவிப்பு: தமிழகத்தில் 2020-21-ம் ஆண்டு முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1, கணினிப் பயிற்றுநர் நிலை-1 ஆகிய பணியிடங்களுக்கு நேரடி நியமனத்துக்கான கணினிவழி தேர்வு கடந்த பிப்ரவரி 12 முதல் 20-ம் தேதி வரை நடைபெற்றது. சுமார் 2 லட்சம் பேர் இத்தேர்வை எழுதினர்.
தேர்வு முடிவு ஜூலை 4-ல் வெளியிடப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் தமிழ்வழியில் பயின்றதற்கான ஆவணங்களை சமர்பிக்க நாளை வரை (ஆகஸ்ட் 30) அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், வரலாறு, விலங்கியல், வணிகவியல், பொருளியல், புவியியல், அரசியல் அறிவியல், மனை அறிவியல், உயிரி வேதியியல், இந்திய கலாச்சாரம், உடற்கல்வியியல், கணினி அறிவியல் ஆகிய பாடங்களுக்கு 1:2 என்ற விகிதப்படி சான்றிதழ் சரிபார்ப்புப் பட்டியல் தயாரிக்கப்பட்டு http://trb.tn.nic.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் இடம்பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கான அழைப்புக் கடிதம் தேர்வு வாரிய இணையதளத்தில் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்.
சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க வரும்போது, அனைத்து அசல் சான்றிதழ்களைக் கொண்டுவர வேண்டும். மேலும், சான்றிதழ் சரிபார்ப்புக்கான இடம் மற்றும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். இந்த பட்டியலில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருப்பின் தேர்வு வாரியத்தின் https://forms.gle/ZUYC2Ud5wxcapDku6 என்ற வலைதளம் வழியாக சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணியிடம் குறைப்பு
அரசுப் பள்ளிகளில் 3,237 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதில் ஒன்று குறைக்கப்பட்டு, 3,236 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட உள்ளதாக டிஆர்பி அறிவித்துள்ளது.