விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே கோரையாற்றில் தற்காலிக தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் மூன்று கிராம மக்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்றில் இருந்து ஆற்காடு என்ற கிராமத்திலிருந்து பிரிந்து செல்லும் ஆறுதான் கோரையாறு ஆகும். இந்த ஆறு ஆற்காடு கிராமத்திலிருந்து பிரிந்து சென்று ஏனாதிமங்கலம் ஆற்றில் மீண்டும் இணைகிறது.
இதனிடையே மாரங்கியூர், ஏனாதிமங்கலம் இடையே கோரையாற்றின் தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டது. மழைக்காலங்களில் தரைப்பாலம் அடித்துச் செல்வதால் அங்கு மீண்டும் 24 லட்சம் மதிப்பீல் கோரையாற்றில் தரைபாலம் சிமெண்ட் குழாய்கள் பதிக்கப்பட்டு தரைபாலம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த இரண்டு நாளாக பெய்த கனமழையாலும், சாத்தனூர் அணையிலிருந்து தண்ணீர் வருவதனாலும் தென்பெண்ணை ஆற்றில் அதிக அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அந்த வெள்ள நீரானது கோரையாற்றில் சேர்ந்து வருவதால் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தற்காலிக தரைப்பாலமானது உடைந்து சேதமடைந்துள்ளது. இதனால் மாரங்கியூரில் இருந்து ஏனாதிமங்கலம் வழியாக திருவெண்ணெய்நல்லூர் செல்லும் மக்கள் மற்றும் முன்று கிராம மக்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது தரைபாலத்தை கடந்து செல்வதற்கு 5 கி,மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது தகவல் அறிந்து விழுப்புரம் மாவட்டம் ஆட்சியர் தரைபாலத்தை ஆய்வு செய்து வருகின்றனர்.