தானங்களில் சிறந்தது கண்தானம் என்று பலமுறை கேள்விப்பட்டிருப்போம். போதுமான விழிப்புணர்வு இல்லாமல் தினமும் எத்தனையோ சடலங்கள் கண்களோடு, கருவிழிகளோடு புதைக்கவோ, எரிக்கவோ படுகின்றன. கண்தானத்தின் அவசியம் குறித்தும், அது எப்படியெல்லாம் செய்யப்படுகிறது என்றும் விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த விழித்திரை சிகிச்சை மருத்துவர் வசுமதி வேதாந்தம்.
”உலக சுகாதார நிறுவனத்தின் தரவுகளின்படி கார்னியல் பிளைண்ட்னெஸ் எனப்படும் கருவிழி பாதிப்பானது பார்வையிழப்புக்கு காரணமான விஷயங்களில் நான்காவது இடம் வகிப்பதாகத் தெரிகிறது. உலகத்திலேயே பார்வையிழப்புக்கு காரணமான விஷயங்களில் முதல் மூன்று இடங்கள், கண்புரை பாதிப்பு, க்ளாக்கோமா எனும் கண் அழுத்த பிரச்னை, வயதாவதால் ஏற்படும் பார்வை பாதிப்பு என்கிறது உலக சுகாதார நிறுவனம். அந்த வரிசையில் நான்காவது இடம் கருவிழி பாதிப்புக்கு. அதன் பாதிப்பு சதவிகிதம் 5.1 சதவிகிதம்.
இறந்தவர்களின் கண்களை அடுத்த 6 மணி நேரத்துக்குள் எரிக்கவோ, புதைக்கவோ கூடாது. இறந்தவர்களின் கண்கள் நல்லநிலையில் இருக்கும்பட்சத்தில் அவற்றை எம்கே மீடியம் (MK Medium) எனும் பிரத்யேக ஸ்டோரேஜில் வைத்து எடுத்துவருவார்கள். கருவிழி மாற்று அறுவைசிகிச்சை தேவைப்படுவோருக்கு அவற்றைப் பொருத்துவதன் மூலம் பார்வை கிடைக்கச் செய்ய முடியும்.
கார்னியல் பிளைண்ட்னெஸ் எனப்படும் கருவிழி பாதிப்பானது உலக அளவில் பார்வையிழப்புக்கான காரணங்களில் முக்கியமானது. இந்தியாவில் அந்த பாதிப்பு இன்னும் அதிகம். பாதிப்புகள் இருக்கும் அளவுக்கு, கருவிழிகள் தானமாகக் கிடைப்பதில்லை என்பதுதான் பெரும் சோகம்.
கருவிழிகளை தானம் கொடுக்க முடியும் என்ற விழிப்புணர்வு இல்லாமலும், சடங்கு, சம்பிரதாய நம்பிக்கைகளை விட்டுக்கொடுக்க முடியாமலும் இறந்தவர்களின் சடலங்களை அப்படியே எரிக்கவோ, புதைக்கவோ செய்கிறார்கள். அதனால் கண்கள் வீணாகின்றன.
முன்பெல்லாம் கருவிழி மாற்று அறுவை சிகிச்சை என்பது தையல் போடப்பட்டுச் செய்யப்படுகிற சிகிச்சையாக இருந்தது. இன்று தையலே இல்லாமல் செய்யப்படுகிற அளவுக்கு அது நவீனமாகியிருக்கிறது.
‘பெனட்ரேட்டிங் கெரட்டோபிளாஸ்டி’ (Penetrating keratoplasty) எனும் முறையில் கருவிழியில் உள்ள ஐந்து லேயர்களையுமே டிரான்ஸ்ப்ளான்ட் செய்ய முடியும். ‘டீப் ஆன்டீரியர் லாமெல்லார் கெரட்டோபிளாஸ்டி’ (Deep anterior lamellar keratoplasty [DALK] ) நிலையில் கருவிழியின் வெளிப்புற மற்றும் நடுவிலுள்ள லேயர்களை மட்டும் டிரான்ஸ்ப்ளான்ட் செய்ய முடியும். ‘எண்டோதீலியல் கெரட்டோபிளாஸ்டி’ (Endothelial Keratoplasty) என்பதில், கருவிழியின் பின் லேயரை மட்டும் டிரான்ஸ்ப்ளான்ட் செய்ய முடியும்.
இப்படிச் செய்யப்படுகிற கருவிழி மாற்று அறுவை சிகிச்சையில், பிரச்னைகள் ஏதும் இல்லாத பட்சத்தில் 5 முதல் 15 வருடங்கள் வரை அப்படியே இருக்கும். ஆனால் இந்த அறுவைசிகிச்சைக்குப் பிறகு சம்பந்தப்பட்ட நபர், அடிக்கடி கண் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். சில நேரங்களில் இப்படி வைக்கப்படுகிற கருவிழி லேயரை, உடலானது அந்நியப் பொருள் என நினைத்து நிராகரிக்கும். அதை ‘கிராஃப்ட் ரிஜெக்ஷன்’ (Graft rejection) என்று சொல்வோம்.இது உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் பொதுவாக நடப்பதுதான். கருவிழி மாற்று அறுவைசிகிச்சையிலும் அப்படி நடக்கும்.
கருவிழியில் பூ விழுவது, அடிபடுவது, கண்ணில் இன்ஃபெக்ஷன் ஏற்பட்டு அதை கவனிக்காமல் விடுவது, கான்டாக்ட் லென்ஸ் அணிவோருக்கு ஏற்படும் பாதிப்பு போன்றவற்றுக்கு கருவிழி மாற்றுதான் ஒரே தீர்வு என்ற நிலை சிலருக்கு வரலாம். அதை ‘தெரபியூட்டிக் கெரட்டோபிளாஸ்டி’ (Therapeutic Keratoplasty) என்று சொல்வோம். இவை தவிர சிலருக்கு கருவிழிகள் வளைந்திருக்கும். ‘கெரட்டோகோனஸ்’ எனப்படும் அந்தப் பிரச்னைக்கு கருவிழி மாற்று அறுவை சிகிச்சை செய்து அந்த வளைவை சரிசெய்து, பார்வையையும் மேம்படுத்த முடியும். கருவிழி மாற்று அறுவை சிகிச்சை வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு என்பது 95 சதவிகிதம். இந்தச் சிகிச்சையில் இன்ஃபெக்ஷன், கண் அழுத்தம் அதிகரிப்பது போன்ற பக்க விளைவுகள் வரலாம்” என்றார்.
– ராஜலட்சுமி