உத்தர பிரதேசம் மாநிலம் நொய்டாவில் எமரால்டு கோர்ட் என்ற திட்டத்தின் கீழ் சூப்பர்டெக் நிறுவனம் அபெக்ஸ் (32 மாடி), சேயன் (29 மாடி) என 2 அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்கள் கட்டப்பட்டன. இந்த கட்டடங்கள் விதிகளை மீறி கட்டப்பட்டதாக கூறி வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையை அடுத்து உச்ச நீதிமன்றம் கட்டடங்களை இடிக்க உத்தரவிட்டது.
3,700 கிலோ வெடிமருந்துகள் பயன்படுத்தி நேற்று(ஆகஸ்ட் 28) பிற்பகல் 2.30 மணியளவில் 9 நொடிகளில் கட்டடம் தகர்க்கப்பட்டது. கட்டட இடிபாடுகள் சுமார் 80,000 டன் உள்ளது.
கட்டட இடிப்பு குழுவினருக்கு 2 முக்கிய பணிகள் உள்ளன. ஒன்று 80,000 டன் இடிபாடுகள் அகற்றும் பணி மற்றொன்று கட்டடத்தை சுற்றி வைக்கப்பட்ட கருப்புப் பெட்டிகள், ஆக்சிலேரோமீட்டர் (accelerometers) தரவுகளை ஆய்வு செய்யும் பணியாகும்.
கட்டட இடிப்பு பணியை மேற்கொண்ட எடிஃபைஸ் இன்ஜினியரிங் மற்றும் மத்திய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (சிபிஆர்ஐ) ஆகிய இரண்டும் 20 கண்காணிப்பு அமைப்புகள் அமைக்கப்பட்டன. எடிஃபைஸ் இன்ஜினியரிங் நிறுவன பார்ட்னர் உத்கர்ஷ் மேத்தா கூறுகையில், சில அமைப்புகளை நாங்கள் மீட்டுள்ளோம். தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. எல்லா அமைப்புகளையும் மீட்டெடுக்க, தரவுகள் சேகரிக்க 1-2 வாரங்கள் ஆகும் எனத் தெரிவித்தார்.
சூப்பர்டெக் இரட்டை கோபுரங்களின் இடிபாடுகளை அகற்றும் பணி ராம்கி குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டு, 3 மாதங்களில் அகற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. “இடிபாடுகளை அகற்ற 90 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. நாங்கள் பல அதிகாரிகள் மற்றும் குடியிருப்போர் நலச் சங்கத்துடன் (RWA) இணைந்து பணியாற்றி வருகிறோம்” என்று மேத்தா கூறினார்.
“ராம்கி குழுமம் முதலில் ஒப்புக்கொள்ளவில்லை. இடிபாடுகள் அதிகம் இருப்பதால் ஒப்புக்கொள்ள தயங்கினர். பிறகு ஒப்புக்கொண்டனர். மொத்தம் 80,000 டன் இடிபாடுகள் உள்ளன. இதில், 50,000 டன் அடித்தளம் மற்றும் பிற புனரமைப்புக்கு பயன்படுத்தப்படும். ஸ்டீல், கான்கிரீட் மற்றும் பிற பொருட்கள் அதிகம் உள்ளன. அதை மீண்டும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். 45 வருட அனுபவம் உள்ளது. (ஜெட் டெமாலிஷன்) தொடங்கி அனுபவம் உள்ளது” எனக் கூறினார்.
எடிஃபைஸ் இன்ஜினியரிங் கட்டட இடிப்பு திட்ட மேலாளர் மயூர் மேத்தா கூறுகையில், “ஆகஸ்ட் 24 , எடிஃபைஸ் இன்ஜினியரிங் நொய்டா ஆணையத்தின் முன் இடிபாடுகள் மேலாண்மைத் திட்டத்தைச் சமர்ப்பித்தது. 36,000 கன மீட்டர் இடிபாடுகள் உருவாகும். 36,000 கன மீட்டரில், 23,133 கன மீட்டர் இரண்டு கோபுரங்களின் அடித்தளத்தில் இருக்கும். மீதமுள்ள 12,867 கட்டட வளாகத்தில் இருக்கும். அவை அகற்றப்பட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.
ஜெட் டெமாலிஷனைச் சேர்ந்த ஜோ பிரிங்க்மேன் கூறுகையில், “பல கட்டடங்கள் அருகாமையில் உள்ள நிலையிலும் இரட்டை கோபுரங்கள் பாதுகாகாப்பாக தகர்க்கப்பட்டது. இவ்வாறு செய்வது இதுவே முதல் முறையாகும். உலகில் 100 மீட்டர் உயரம் கொண்ட வகையில சில கட்டடங்கள் மட்டுமே உள்ளன. பல குடியிருப்புகள் அருகில் உள்ள போதும் பாதுகாகாப்பாக தகர்க்கப்பட்டது. இதற்கு முன்பு இப்படிச் செய்யப்பட்டதாக தெரியவில்லை” என அவர் கூறினார் .
ஏடிஎஸ் கிராமத்தை ஒட்டிய குடியிருப்பு வளாகத்தின் எல்லைச் சுவர் சேதமடைந்தது குறித்து கேட்டபோது, “எடிஃபைஸ் இன்ஜினியரிங் பார்ட்னர் ஜிகர் செட்டா கூறுகையில், காற்று வீசியதால் துணி கிழிந்துள்ளது. சிறிய சேதம் உள்ளது. நாங்கள் அதை ஆராய்ந்து வருகிறோம். ஏடிஎஸ் கிராமத்தின் சுற்றுச்சுவரின் ஒரு பக்கம் சேதமடைந்துள்ளது. பிரதான சாலையில் இடிபாடுகள் இல்லை. அருகில் உள்ள கட்டடங்களில் சிறிய விரிசல் ஏற்பட்டுள்ளது. அளவீடுகளையும் சரிபார்த்து வருகிறோம்” என்றார்.
வியாழக்கிழமை, கட்டட இடிப்பு முன்னெச்சரிக்கை பணிகள் ஆய்வு செய்யப்பட்டு மற்றும் அனைத்து பங்குதாரர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. நொய்டா தலைமை நிர்வாக அதிகாரி ரிது மகேஸ்வரி கூறுகையில், கட்டடக் கழிவுகள் கட்டுமான மற்றும் இடிப்பு கழிவு மேலாண்மை ஆலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அறிவியல் முறையில் செயலாக்கப்படும் என்று கூறினார்.
வெள்ளிக்கிழமையன்று ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், சுமார் 28,000 மெட்ரிக் டன் கட்டுமான மற்றும் இடிபாடு கழிவுகள், செக்டார் 80இல் அமைந்துள்ள இடிப்பு கழிவு மேலாண்மை ஆலைக்கு அனுப்பப்படும், அங்கு அது அறிவியல் முறையில் பிராசஸ் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“