பெண் குழந்தைக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாடு முழுவதும் தினந்தோறும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அதுவும் உற்றார் உறவினர்களாலேயே இந்த பாலியல் தொல்லைக்கு ஆளாகி வருவது தொடர்ந்து பொதுவெளியில் அம்பலமாகி வருகிறது.
அந்த வகையில், தனது மகளை தன்னுடன் லிவ்-இன் வாழ்க்கையில் இருந்து வந்த நபரே பாலியல் ரீதியில் அணுக முயற்சித்ததை அறிந்த தாய் அந்த நபரின் பிறப்புறுப்பை கத்தியால் வெட்டிய சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடந்திருக்கிறது.
லக்கிம்புர் கெரி மாவட்டத்தில் உள்ள மஹெவகஞ்ச் பகுதியில் தனது 14 வயது மகளுடன் வசித்து வருபவர் 36 வயது பெண். இவரது கணவருக்கு மது பழக்கம் இருந்ததன் காரணமாக அவரை விட்டு பிரிந்து 32 வயதுடைய நபருடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக லிவ்-இன் முறையில் வாழ்ந்து வந்திருக்கிறார்.
இப்படி இருக்கையில் கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி தனது விவசாய பணியை மேற்கொண்டிருந்த அப்பெண் எதேர்ச்சையாக தனது வீட்டுக்கு வந்த போது அந்த காதலன் தன்னுடைய மகளிடம் தவறாக நடந்துக் கொண்டதை கண்டு அதிர்ச்சியுற்றிருக்கிறார். இதனையடுத்து அந்த பெண்ணையும் அந்த நபர் தாக்க முற்பட்டிருக்கிறார்.
இதனால் தன்னுடைய மகளை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் வீட்டின் சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து காதலனின் பிறப்புறுப்பை வெட்டியிருக்கிறார். இது தொடர்பாக பேசியுள்ள அப்பெண், “என் மகளை காப்பாற்றுவதற்காகத்தான் செய்தேன். இதில் எந்த தவறும் இருப்பதாக நான் கருதவில்லை” எனக் கூறியுள்ளதை டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி மூலம் அறிய முடிகிறது.
இந்த சம்பவத்தை அடுத்து குற்றஞ்சாட்டப்பட்ட நபர் மீது போக்சோ மற்றும் பாலியல் வன்கொடுமை தொடர்பான சட்டப்பிரிவு 376ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், பிறப்புறுப்பில் வெட்டப்பட்டதால் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால் அந்த நபர் உயர் சிகிச்சைக்காக லக்னோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் லக்கிம்புர் கெரி மாவட்ட காவல்துறை அதிகாரி சந்திரசேகர் சிங் தெரிவித்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM