ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா என்ற இடத்தை சேர்ந்த 12-வது வகுப்பு படிக்கும் மாணவிக்கு ஷாருக் என்பவன் போன் செய்து தன்னுடன் நட்புடன் பழகும்படி கேட்டுக்கொண்டான். ஆனால் மாணவி அதற்கு மறுத்துவிட்டார். கடந்த சில நாள்களுக்கு முன்பு மீண்டும் ஷாருக் போன் செய்து அதே மாணவியிடம் நட்பு கோரிக்கைக்கு சம்மதிக்கவில்லை எனில் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளான். உடனே மாணவி தனது தந்தையிடம் இந்த மிரட்டல் குறித்து தெரிவித்தார். மாணவியின் தந்தையும், ஷாருக் பெற்றோரிடம் இது குறித்து பேசுவதாக தெரிவித்தார். பின்னர் இரவில் அனைவரும் சாப்பிட்டுவிட்டு உறங்க சென்றனர்.
மாணவி தனி அறையில் உறங்கினார். அதிகாலையில் மாணவி நல்ல உறக்கத்தில் இருந்த போது ஷாருக் ஜன்னல் வழியாக பெட்ரோல் ஊற்றி தீவைத்துவிட்டார். இதில் மாணவி 90 சதவீத காயத்துடன் தும்கா அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ராஞ்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மாணவி சிகிச்சை பலனளிக்காமல் இறந்து போனார். மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போதே ஷாருக்கை போலீஸார் கைது செய்தனர். தீவிபத்தில் உயிரிழந்த மாணவி நீதிபதி முன்னிலையில் வாக்குமூலம் கொடுத்துள்ளார். நீதிபதியிடம் அளித்த வாக்குமூலத்தில் ஷாருக் தனக்கு போன் செய்து மிரட்டியதை தெரிவித்துள்ளார். அதோடு, “அதிகாலையில் தனது கழுத்து பகுதியில் வலி எடுத்தது போன்ற உணர்வு ஏற்பட்டவுடன் எழுந்த போது ஜன்னல் பகுதியில் ஷாருக் தப்பி ஓடிக்கொண்டிருந்தான். எனது உடல் முழுவதும் தீக்காயத்தால் வலி இருந்தது. நான் எனது தந்தை அறைக்கு சென்றேன். பெற்றோர் தீயை அணைத்து மருத்துவனையில் சேர்த்தனர்” என்று தெரிவித்தார்.