ராஜஸ்தான் ஆளுநர் மாளிகையில் ஆர்எஸ்எஸ் முன்னாள் பிரமுகர் ஒருவர் தலைமையில் ராம கதை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக சமூக செயற்பாட்டாளர்கள் தங்களின் எதிர்ப்பை பதிவிட்டுவருகின்றனர்.
மேலும், ஆளுநர் மாளிகையில் ராம கதை நிகழ்ச்சி நடத்தப்டுவது இதுவே முதல்முறை ஆகும். இந்த நிகழ்ச்சிக்கு மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான பாஜக இதுவரை எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
இதற்கிடையில் காங்கிரஸ் நிகழ்ச்சியை ஊக்குவிப்பதாக சமூக செயற்பாட்டாளர் ஒருவர் குற்றஞ்சாட்டினார். சனிக்கிழமை (ஆகஸ்ட் 27) தொடங்கிய இந்நிகழ்வில் பாஜக தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் விஜய் கௌஷல் என்பவர் ராம சரித்திரத்தை வாசிப்பார். இது தினமும் மாலை 4 மணி முதல் 7 மணி வரை நடைபெறுகிறது. விஜய் கௌஷால் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவர்.
இவர் ஆர்எஸ்எஸ் முன்னாள் உறுப்பினர் ஆவார். இந்த ராமாயண உரை விஜய் கௌஷாலின் வலையொளியில் (You Tube) நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்த ராமாய நிகழ்வில் பொதுமக்களும் கலந்துகொள்கின்றனர்.
சனிக்கிழமை தொடங்கிய இந்நிகழ்வின்போது கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா, ராமர்-லட்சுமணர் திருஉருவ படங்களுக்கு பூஜை செய்தார்.
மேலும், “பக்தி கலா பிரதர்ஷனி” என்ற தலைப்பில் பக்தி ஓவியங்கள் மற்றும் கலைப் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள கலைக் கண்காட்சியையும் தொடங்கி வைத்தார். அப்போது பாஜக மாநிலங்களவை எம்பி கன்ஷியாம் திவாரி மற்றும் ஜெய்ப்பூர் மக்களவை பாஜக எம்பி ராம்சரண் போக்ரா ஆகியோர் கலந்துகொண்டனர்.
இது தொடர்பாக ஆளுநர் மாளிகை விடுத்துள்ள அறிக்கையில், “விஜய் கௌஷால் போன்ற ஒரு ராம கதை ஆசிரியரிடம் இருந்து, ராம சரித்திர நிகழ்வுக்கு கோரிக்கை வந்தது அதிர்ஷ்டம்.” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தத.
விஜய் கௌஷாலைப் போலவே கல்ராஸ் மிஸ்ராவும் ஒருகாலத்தில் ஆர்எஸ்எஸ் பரப்புரையாளராக, ஜெய்பிரகாஷ் நாராயணனின் கூட்டாளியாக திகழ்ந்தவர் ஆவார்.
இவர் 1963 இல் கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் உள்ள கோரக்பூரில் ஆர்எஸ்எஸ் உடன் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். ஜேபி இயக்கத்தின் தாக்கத்தால், 1974 இல் கிழக்கு உ.பி.யில் நாராயணனால் தொடங்கப்பட்ட “சம்பூர்ண கிராந்தி (மொத்தப் புரட்சி)” யின் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றினார்.
பாஜகவின் உத்தரப் பிரதேச தலைவராக பணியாற்றிய அவர், மாநிலத்திலும் மத்தியிலும் அமைச்சராக இருந்துள்ளார். அவர் 2019 இல் ராஜஸ்தான் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
இது குறித்து சிவில் உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியத்தின் (People’s Union for Civil Liberties- PUCL) ராஜஸ்தான் பிரிவு தலைவர் கவிதா ஸ்ரீவஸ்தவா விடுத்துள்ள அறிக்கையில், “ஆளுநர் மாளிகையில் மத விழாச நடத்துவது அரசியலமைப்பு பதவியின் கண்ணியத்துக்கு எதிரானது.
மேலும், “நாட்டின் மதசார்ப்பு மதிப்புகளும் எதிரானது. ஆகவே விழாவை மாற்று இடத்தில் நடத்திக்கொள்ள கேட்டுள்ளோம். இந்த விழாவுக்கு மாநில அரசு நிதி உதவி செய்யக் கூடாது” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”