சிபிஐ, அமலாக்கத்துறை ரெய்டில் அரசியல்: எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு!

ஒன்றிய அரசின் சிபிஐ, அமலாக்கத்துறை ஆகிய ஏஜென்சிகள் பல்வேறு மாநிலங்களில் ரெய்டுகளை நடத்தி வருகின்றன. ஆனால் இந்த ரெய்டுகள் பாஜக ஆளும் மாநிலங்களில் ஏன் நடப்பதில்லை என்ற கேள்வி நாடு முழுவதும் எதிரொலிக்கிறது.

பாஜக அல்லாத பிற கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களின் அரிசி ஆலைகள், குடோன்கள், குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றில் சோதனை நடத்தப்படுகிறது. ஒரு சில சந்தர்ப்பங்களில், இந்த ரெய்டுகள் நடத்தப்படும் நேரம் அரசியல் உள்நோக்கத்துடன் இது நடைபெறுகிறதா என்ற கேள்வியை வலுவாக எழவைக்கிறது.

உதாரணமாக, பீகாரில், ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக, பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, 25 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தப்பட்டது.

அதிமுகவில் அதிரடி: ஓபிஎஸ் கொடுத்த சேஞ்ச் ஓவர் – சசிகலா இருக்க பயமேன்?

பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், பாஜக கூட்டணியில் இருந்து பிரிந்து, ஆர்ஜேடி, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகளுடன் கைகோர்த்த பிறகு, சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இந்த சோதனை நடத்தப்பட்டது.

பஞ்சாப், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, கேரளா, சத்திஷ்கர், ஜார்கண்ட், மேற்கு வங்கம், டெல்லி என பல மாநிலங்களில் இதுதான் நிலைமை.

தொழில்துறை அமைச்சரும் டிஆர்எஸ் செயல் தலைவருமான கேடி ராமாராவ் ஜூன் மாதம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “கடந்த 8 ஆண்டுகளில் பாஜக தலைவர்கள் அல்லது அவர்களது குடும்பத்தினர் மீது எத்தனை சிபிஐ அல்லது அமலாக்கத்துறை ரெய்டுகள் நடத்தப்பட்டன? பாஜக தலைவர்கள் அனைவரும் ராஜா சத்ய ஹரிச்சந்திராவின் நெருங்கிய உறவினர்களா” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

கர்நாடகாவில் பாஜக அரசு கல்வித் துறையில் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ளது, ஒப்பந்ததாரர்கள் சங்கங்கள் தலைவர்கள் 40 சதவீத கமிஷன் கோரியதாக குற்றம் சாட்டினர், சான்றிதழ் புதுப்பித்தல் தொடர்பாக பள்ளி நிர்வாகங்கள் சங்கங்கள் இதே போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன. ஆனால் கர்நாடகாவில் ஒரு சிபிஐ அல்லது அமலாக்கத்துறை சோதனைகூட நடத்தப்படவில்லை.

இதேபோல், மேகாலயாவில், பாஜக துணைத் தலைவர் பெர்னார்ட் என் மரக், துராவில் உள்ள தனது பண்ணை வீட்டில் விபச்சார விடுதி நடத்தியதாகக் கூறி போலீஸாரால் தேடப்பட்டு வந்தார். பல நாட்கள் தலைமறைவாக இருந்த அவர் சமீபத்தில்தான் உத்தரபிரதேசத்தில் கைது செய்யப்பட்டார்.

மத்திய புலனாய்வு அமைப்புகளை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துகிறது என்று எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் போதும் பாஜக தலைவர்களின் அலுவலகங்கள் அல்லது குடியிருப்புகளில் எந்த சோதனையும் நடத்தப்படவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.