அதிமுக பொதுக்குழு தொடர்பான தனி நீதிபதியின் உத்தரவு ஓபிஎஸ்ஸுக்கு புதிய உத்வேகத்தை கொடுத்துள்ளது. தீர்ப்பையடுத்து, இபிஎஸ் ஆதரவாளர்கள் ஓபிஎஸ் பக்கம் சாய்ந்து வருகிறார்கள். மூத்த நிர்வாகிகள் பலரும் ஓபிஎஸ்ஸுடன் தொடர் பேச்சுவார்த்தைகளில் இருப்பதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து
மேல்முறையீடு செய்திருந்தாலும், ஓபிஎஸ்ஸுக்கு சாதகமாகவே இனி வரும் காலங்களில் காட்சிகள் அரங்கேறும் என்கிறார்கள் அதிமுக உள் விவகாரங்களை கவனித்து வருபவர்கள்.
தொடக்கத்தில், எடப்பாடி பக்கம் அடித்த காற்று இப்போது ஓபிஎஸ் பக்கம் வீசுவதற்கான காரணம் பற்றி விசாரித்தால், டெல்லி பக்கம் கை காட்டுகிறார்கள். ஆரம்பம் முதலே அதிமுகவில் நடக்கும் பிரச்சினைகளை டெல்லி பாஜக மேலிடம் ரசிக்கவில்லை. அவர்களை பொறுத்தவரை
, ஓபிஎஸ், இபிஎஸ், டிடிவி தினகரன் என அனைவரும் இணைந்த அதிமுகவையே விரும்புகிறார்கள். அதிமுக ஒற்றுமையாக இருந்தால்தான், எதிர்வரவுள்ள 2024 தேர்தலில் இரட்டை இலைக்கான வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் எடுக்க முடியும் என்பது அவர்களது கணக்காக இருக்கிறது.
இதற்காக எடப்பாடி பழனிசாமியை சமாதானப்படுத்தும் அனைத்து முயற்சிகளிலும் பாஜக தோல்வியடைந்து விட்டது. சசிகலா, டிடிவிவை இணைக்க முதலில் மறுப்பு தெரிவித்து வந்த அவர், இப்போது ஓபிஎஸ்ஸுடன் இணைந்து செல்லவும் மறுப்பு தெரிவித்துள்ளார். தனது விருப்பத்தை நேரடியாகவும், மறைமுகமாகவும் பலமுறை பாஜக சொல்லிப் பார்த்தாலும், தனது முடிவில் இபிஎஸ் விடாப்படியாக இருப்பது டெல்லி மேலிடத்தை எரிச்சலுக்குள்ளாக்கியுள்ளது. இதன் காரணமாகவே டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமியை மோடி, அமித் ஷா ஆகியோர் சந்திக்க மறுத்து விட்டதாகவும் கூறுகிறார்கள்.
டெல்லியில் மோடி, அமித் ஷா ஆகியோரை சந்திக்கவில்லை என்றாலும், முக்கியமான சிலரை இபிஎஸ் சந்தித்து விட்டுத்தான் திரும்பினார் என்கின்றன க்ரீன் வேஸ் சாலை பட்சிகள். அப்போது, சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரை இணைத்துக் கொள்ள வேண்டும். அதிகாரங்கள், பதவிகள் பற்றி பேசிக் கொள்ளலாம் என்று பேசப்பட்டுள்ளது. ஆனால், எடப்பாடி பழனிசாமியோ தனது முடிவில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று தெரிவித்துள்ளார். ஒரு கட்டத்தில் கோபமான டெல்லி பாஜக மேலிடம் எடப்பாடி பழனிசாமியிடம் கடுமை காட்டியதாக கூறுகிறார்கள். இதனால், டென்ஷனான எடப்பாடி பழனிசாமி, ‘நீங்க செய்றத செங்க நான் சட்டரீதியா பாத்துக்கிறேன்’ என்று தடாலடியாக தெரிவித்து விட்டு கிளம்பி விட்டாராம்.
ஆனால், சட்டமே தங்கள் கையில் தான் என்பதை பாஜக நிரூபித்து வருகிறது என்கிறார்கள். உதாரணமாக, பினாமி பரிவர்த்தனை தடை சட்டத்தில் 2016ஆம் ஆண்டில் ஏற்படுத்திய திருத்தங்கள் செல்லாது என்ற உச்ச நீதிமன்ற உத்தரவால், சசிகலாவின் பினாமி சொத்துகளுக்கான சிக்கல் விலகி விட்டது. இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற புகாரில் டிடிவி தினகரனுக்கு இருந்த சிக்கல் நீங்கியுள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை. பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு உள்ளிட்ட ஓபிஎஸ்ஸுக்கு சாதகமாக நடக்கும் சம்பவங்கள் உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டுகின்றனர்.
அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக வந்து விட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி பல்வேறு காய் நகர்த்தல்களை செய்து வருகிறார். சட்டரீதியாக ஒருபக்கம் என்றால் ஜோசிய ரீதியாக ஒருபக்கம் யாகம் நடத்துகிறார், யாக மையை நெற்றியில் வைத்து கொண்டு பொதுக்குழுவுக்கு வருகிறார். ஆனாலும், பொதுக்குழு செல்லாது என்று தீர்ப்பு வருகிறது. எத்தனை பரிகாரங்களை அவர் செய்தாலும், முக்கிய அனுகிரகமான டெல்லியின் பார்வை படமால் அவருக்கு எதுவும் கைகூடாது என்கிறார்கள்.
எடப்பாடி பழனிசாமி மட்டுமல்ல அதிமுகவில் ஒற்றைத் தலைமை என்ற திட்டத்தோடு சசிகலா, ஓபிஎஸ், டிடிவி என யார் வந்தாலும் டெல்லி பாஜக அதனை அனுமதிக்காது. அத்துடன், எடப்பாடி பழனிசாமி காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் ஒரு தகவல் தட்டி விடப்பட்டிருக்கிறது. எனவே, அவரை முழுமையாக நம்பும் மனநிலையில் பாஜக இல்லை. எந்த நேரத்திலும் தங்களுக்கு எதிராக திரும்பி விடுவார் என்ற எண்ணமே மேலோங்கி உள்ளதாக தெரிகிறது. பாஜகவின் விருப்பத்தை ஓபிஎஸ் ‘கககபோ’ என புரிந்து கொண்டுள்ளார். இதனாலே, அவருக்கு சாதகமான விஷயங்கள் நடந்து வருவதாக கூறுகிறார்கள்.