மதுரையில் அரசுப் பேருந்து படிக்கட்டில் பயணித்த 9-ஆம் வகுப்பு மாணவர் தவறி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை விளாங்குடியைச் சேர்ந்தவர் பிரபாகரன் என்ற மாணவர். இவர், ஆரப்பாளையத்தில் உள்ள அரசு உதவிப்பெறும் பள்ளியில் 9-வகுப்பு பயின்று வந்தார். நாள்தோறும் பள்ளிக்கு அரசுப் பேருந்தில் சென்று வருவதுதான் வழக்கம். இந்நிலையில், இன்று வழக்கம்போல் காலையில் ஆரம்பாளையம் சென்ற அரசுப் பேருந்தில் பள்ளி செல்வதற்காக பயணித்துக் கொண்டிருந்தார். மிகவும் அதிகளவில் கூட்டம் இருந்ததன் காரணமாக, பேருந்தின் முன்பக்க படிக்கட்டில் தொங்கியபடி பயணித்துள்ளார் மாணவர் பிரபாகரன்.
அப்போது எதிர்பாரதவிதமாக பேருந்தில் இருந்து கீழே தவறி விழுந்ததில் மாணவர் பிரபாகரனுக்கு தலையில் காயம் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அங்கிருந்தவர்கள் கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி நேரங்களில் காலை மற்றும் மாலையில் அதிகளவிலான கூட்டம் நிலவுதால், மாணவர்கள் தொங்கியபடியே செல்லும்நிலையில், இந்த மாணவரும் அவ்வாறு சென்றபோதுதான் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் கூடுதலாக அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM