மாணவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்த திட்டம்!

தமிழ்நாடு முதலமைச்சர்

இன்று (29.8.2022) சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற ‘நான் முதல்வன்,திட்டத்தின் மாபெரும் திறன் மேம்பாட்டுத் திட்டத்தினை தொடங்கி வைத்து, ‘நான் முதல்வன்’ திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டத்தின் இணைய தளத்தையும் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தின் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள், படிப்பில் மட்டுமல்லாது, வாழ்க்கையிலும் வெற்றியாளராக்கும் வகையில் திறன் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டுதல் திட்டமாகிய ‘நான் முதல்வன்’ என்கிற புதிய திட்டத்தை 1.3.2022 அன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் சிறப்பம்சமானது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவியர்களின் தனித் திறமைகளை அடையாளம் கண்டு, அதனை மேலும் ஊக்குவித்து, அடுத்து அவர்கள் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எப்படிப் படிக்கலாம் என்று வழிகாட்டுவதுடன், தமிழில் தனித் திறன் பெறவும், சிறப்புப் பயிற்சியுடன் ஆங்கிலத்தில் எழுதவும், சரளமாகப் பேசவும், நேர்முகத் தேர்வுக்கு தயாராவதற்கும் பயிற்சிகள் வழங்கப்படும்.

அதன் தொடர்ச்சியாக, முதல்வர் ஸ்டாலினால் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ள ‘நான் முதல்வன்’ திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தின் இணையதளமானது, தமிழக இளைஞர்கள் வளர்ந்து வரும் தொழில் நுட்பத்திற்கேற்ப தனித்திறன்களை வளர்த்துக் கொள்ளும் வகையில் இலவச திறன் பயிற்சிகள், குறைவான கட்டணத்துடன் கூடிய திறன் பயிற்சிகள், பாடத்திட்டத்துடன் கூடிய திறன் பயிற்சிகள் மற்றும் பாடத்திட்டத்துடன் இணைக்கப்படவுள்ள திறனெய்தும் தொழில்நுட்ப பாடங்கள், போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகள், ஆங்கிலம், ஜப்பானிய, ஜெர்மன் மொழித்திறன் பயிற்சிகள், ஆளுமைத்திறன் பயிற்சிகள், உயர் கல்விக்கான நுழைவுத்தேர்வு பயிற்சிகள் என அனைத்தும் ‘நான் முதல்வன்’ இணையதளத்தின் மூலம் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரி இளைஞர்கள் நவீன தொழில் நுட்பங்களில் விருப்பத்திற்கேற்ற வேலைவாய்ப்பினை பெறும் வகையிலான குறுகிய கால பயிற்சிகளை தெரிவு செய்து உலகத்தரத்திலான பயிற்சிகளையும் அதற்குரிய சான்றிதழ்களையும் பெறலாம். இதற்கான இலவச படிப்புகள், குறைவான கட்டணத்துடன் கூடிய படிப்புகள் மற்றும் பாடத் திட்டத்துடன் கூடிய படிப்புகள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச தரத்துடன் இப்படிப்புகளை தமிழக மாணவர்களுக்கு வழங்கும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், 47 பன்னாட்டு மற்றும் முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

முன்னதாக, திறன் பயிற்சி தொடர்பாக பல்வேறு நிறுவனங்களின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை முதலமைச்சர் திறந்து வைத்து, பார்வையிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.