நீலகிரி மாவட்டம், கூடலூர் காந்தி திடலில் சமீபத்தில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்திற்கு செய்தி சேகரிக்கச் சென்றிருந்தோம். இடைவிடாது மழை பெய்து கொண்டிருந்தது. திடலுக்கு எதிரில் இருக்கும் சிறிய டீக்கடை ஒன்றில் மழைக்கு ஒதுங்கினோம். சூடான எண்ணெய் பலகாரங்களை ஆவி பறக்க விற்பனை செய்து கொண்டிருந்தார் இளைஞர் ஒருவர். ‘பேரீச்சை போண்டா கொடுங்க’ என நிறைய பேர் வரிசைகட்டி வாங்கிக் கொண்டிருந்தனர். என்னது, பேரீச்சம் பழத்தில் போண்டாவா?
ஆச்சர்யத்துடன் கடைக்காரரிடம் பேசினோம்…
“என் பேர் சபீர். ப்ளஸ் டூ படிச்சிருக்கேன். அப்பா 23 வருஷமா இந்தக் கடைய நடத்திட்டு வர்றார். அப்பாவுக்கு உதவியா கடைக்கு வந்துட்டேன். நோம்பு சமயத்துல வீட்டுல பேரீச்சம் பழத்துல போண்டா செய்வோம். சரி கடையில செஞ்சு பாக்கலாம்னு ட்ரை பண்ணினேன். கஸ்டமர் விரும்பி வாங்க ஆரம்பிச்சாங்க. அப்படியே தொடர்ந்துட்டோம்.
இனிப்பு போண்டா செய்ற மாதிரியே மாவு, சர்க்கரை சேர்த்து தயார் பண்ணி, விதையை எடுத்த பேரீச்சம் பழத்தை மாவுல முக்கி போண்டா செய்றோம். சின்ன போண்டாதான். ஒண்ணு 2 ரூபாய்க்கு விக்கிறோம். ஒவ்வொருவருத்தரும் 10, 20 வாங்கிட்டு போவாங்க. இந்த போண்டாவை வாங்கவே நம்ம கடைக்கு வருவாங்க” என்றார்
வித்தியாச ஐடியா, வித்தியாச ருசி!