சேலம் அரசு மருத்துவமனையில் போலி மருத்துவர்கள் !!

சேலம் அரசு மருத்துவமனைக்கு நேற்று 2 இளைஞர்கள் டிப்-டாப்பாக உடை அணிந்து டாக்டர் போல் கழுத்தில் ஸ்டெதஸ்கோப் அணிந்து கொண்டு வந்தனர். அவர்களைப் பார்த்த நோயாளிகள் இளம் வயது டாக்டர்கள் என்று நினைத்து அவர்களுக்கு வழி விட்டனர்.பின்னர் இருவரும் நேராக கண் அறுவை சிகிச்சை மையத்திற்கு சென்றனர். பின்னர் அங்கிருந்த செவிலியரிடம் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் மற்றும் மருந்து மாத்திரைகளின் விவரங்களைக் கூறும் படி கேட்டனர்.

அப்போது செவிலியருக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனால் புதிதாக டாக்டர் பணிக்கு சேர்ந்து உள்ளீர்களா? என்பது உள்ளிட்ட சில கேள்விகளை கேட்டார். அதற்கு அவர்கள் சரியான பதில் கூறவில்லை.  இதனால் மேலும் சந்தேகம் அடைந்த செவிலியர், இது குறித்து மருத்துவமனையின் டீன் வள்ளி சத்தியமூர்த்திக்கு தகவல் கொடுத்திருக்கிறார். இதையடுத்து அவர் கண் அறுவை சிகிச்சை மையத்திற்கு நேரில் சென்றார். பின்னர் டிப்-டாப் ஆசாமிகளை பார்த்ததும் இருவரும் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் இல்லை என்பது தெரிந்தது. இதையடுத்து 2 பேரையும் பிடித்து அரசு மருத்துவமனை புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் இருவரும் கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் பகுதியை சேர்ந்த சல்மான் (23), சேலம் தளவாய்ப்பட்டி அருகே உள்ள சித்தர்கோவில் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (23) என்பது தெரிந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சல்மான், கார்த்திகேயன் இருவரும் 8-ம் வகுப்பு வரை மட்டுமே படித்து உள்ளனர். இருவரும் முகநூல் மூலம் நண்பர்களாகி இருவரும் முகநூலில் பேசிக்கொள்ளும் போது டாக்டர்கள் போன்று பேசுவதை வழக்கமாகக் கொண்டு உள்ளனர். 

salem GH,fake doctor,Govt hospital,arrest,சேலம் அரசு மருத்துவமனை,போலி மருத்துவர்கள்,

மேலும் அரசு மருத்துவமனைகளில் டாக்டர்களுக்கு நோயாளிகள் கொடுக்கும் மரியாதையைப் பார்த்து அதே போன்று அவர்களுக்கும் நோயாளிகள் மரியாதை கொடுப்பதைக் காண வேண்டும் என்று விபரீத ஆசை ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து சேலம் அரசு மருத்துவமனைக்கு டாக்டர் போன்று வேடமிட்டுச் சென்று பார்க்க ஆசைப்பட்டுள்ளனர். இதற்காக இருவரும் ஆன்லைன் மூலம் ஸ்டெதஸ்கோப் வாங்கி அதை கழுத்தில் அணிந்து கொண்டு நேற்று டாக்டர்கள் போன்று மருத்துவமனைக்குள் நுழைந்துள்ளனர்.  

salem GH,fake doctor,Govt hospital,arrest,சேலம் அரசு மருத்துவமனை,போலி மருத்துவர்கள்,

அப்போது அவர்களுக்கு நோயாளிகள் பலர் வழி விட்டு வணக்கம் தெரிவித்து உள்ளனர். இதை பார்த்த அவர்கள் சந்தோஷமாகச் சிரித்த படி டாக்டர் என்ற நினைப்பிலேயே நகர்ந்தனர். கண் அறுவை சிகிச்சை மையத்திற்கு சென்று அங்கு பணியில் இருந்து செவிலியரிடம் நோயாளிகளுக்கு வழங்கும் சிகிச்சை முறையைக் கேட்ட போது டாக்டர் வேடம் அணிந்து வந்து மாட்டிக்கொண்டனர் என போலீசார் தெரிவித்தனர். டாக்டர் வேடம் அணிந்து வந்த 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் சேலம் அரசு மருத்துவமனையில் பர பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.