மும்பை: ஜியோ 5ஜி சேவை குறித்த அறிவிப்பு அந்நிறுவனத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் தீபாவளி முதல் இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ 5ஜி சேவையை வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, சென்னை உட்பட நான்கு மெட்ரோ நகரங்களில் இந்த சேவை அறிமுகம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி வெளியிட்டுள்ளார்.
“டிஜிட்டல் கனெக்டிவிட்டியில் ஜியோ எடுத்து வைத்துள்ளது அடுத்த அடி குறித்த அறிவிப்பை நான் அறிவிக்க விரும்புகிறேன். அதுதான் ஜியோ 5ஜி. 5ஜி சேவையின் மூலமாக 100 மில்லியன் (10 கோடி) வீடுகளை டிஜிட்டல் வடிவில் இணைப்போம். இந்தியாவில் 5ஜி ரோல் அவுட் செய்யப்படுவதன் மூலம் 800 மில்லியன் இணைய இணைப்புகள் 1.5 பில்லியன் என ஒரே ஆண்டில் இரட்டிப்பாகும். அடுத்த இரண்டு மாதங்களில் இந்த சேவை அறிமுகமாகும்.
முதற்கட்டமாக டெல்லி, மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தாவில் அறிமுகம் செய்யப்படும். வரும் 2023 டிசம்பர் இறுதிக்குள் இந்தியாவில் நகரங்கள், தாலுக்கா என அனைத்து இடங்களிலும் 5ஜி சேவை கிடைக்கப்பெறும். ஜியோவின் 5ஜி சேவை ஸ்டேண்ட் அலோன் வகையில் 5ஜி சேவையாக மட்டுமே இருக்கும். 4ஜி நெட்வொர்க்கை சார்ந்து இந்த இணைப்பு இருக்காது. இது உலகின் மிகப்பெரிய மற்றும் மேம்பட்ட 5ஜி நெட்வொர்காக இருக்கும். அதற்கான பணிகளை 2000-க்கும் மேற்பட்ட ஜியோ பொறியாளர்கள் மேற்கொண்டுள்ளனர். இது அசல் 5ஜி சேவையாக இருக்கும்” என தெரிவித்துள்ளார். சுமார் 2 லட்சம் கோடி ரூபாயை ஜியோ நிறுவனம் 5ஜி சேவைக்காக முதலீடு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Welcome to the 45th Annual General Meeting of Reliance Industries Limited. #RILAGM #RILAGM2022 https://t.co/xzw0WPdNwU
— Reliance Jio (@reliancejio) August 29, 2022