விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்த மாதம் 31ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சிலைகளை நிறுவி பக்தர்கள் வழிபட்டு வருவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் பெரிய அளவில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது. பல வண்ணங்களில் சிலைகள் வடிவமைக்கப்பட்டு வருவதாகவும் மற்றும் நீர் மாசு ஏற்படாத வகையில் மூலப் பொருட்களைக் கொண்டு சிலைகள் வடிவமைப்பதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் அய்யன்கோயில்பட்டு, திண்டிவனம், செஞ்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் தயாரிப்பது வழக்கம். அதில் அய்யன்கோயில்பட்டு கிராமத்தில் மட்டும் அதிக அளவு விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படும். சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த தொழிலை செய்து வருகின்றனர். மேலும் வருடம் முழுவதும் விநாயகர் சிலைக்கான பல பாகங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் இவர்கள் ஆகஸ்ட் மாதம் முழுவதும் விநாயகர் சிலைகளை தயாரிப்பதில் மும்முறமாக இருப்பார்கள். 50 ரூபாயில் தொடங்கி ரூ.25,000 வரைக்குள்ளான விநாயகர் சிலைகள் இங்கு தயாரிக்கப்படும்.
தயாரிக்கப்பட்ட சிலைகள் விழுப்புரம் மாவட்டம் மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும், அண்டை மாநிலங்களான ஆந்திரா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கும் இங்கிருந்து தான் வடிவமைக்கப்பட்ட சிலைகள் கொண்டு செல்லப்படும்.
இதுகுறித்து பேசியிருக்கும் சிலை உற்பத்தியாளர் விஷ்ணு, கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக சிலைகள் தயாரிப்பதில் பெரிய அளவு முடக்கம் ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்தார். அது மட்டுமல்ல இரண்டு ஆண்டுகள் வேலை இல்லாத நிலையில் பெரிய அளவு கடன் சுமை ஏற்பட்டு இருப்பதாகவும், இந்த ஆண்டுதான் மீண்டும் விநாயகர் சிலைகள் செய்கிற பணி தொடங்கி இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் தமிழக அரசு நலிவிடைந்த தங்கள் தொழிலாளர்கள் மீது அக்கறை செலுத்தி ஏதாவது நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் அவர் வைத்துள்ளார்.
– ஜோதி நரசிம்மன்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM