ராணுவ பயிற்சி பள்ளி வளாகத்தில் பறந்த ‘டிரோனை’ சுட்டு வீழ்த்த முயன்ற போது மாயம்; அடையாளம் தெரியாத நபர் மீது வழக்கு

நாசிக்: நாசிக் பகுதியில் செயல்படும் ராணுவப் பகுதியில் ஆளில்லா விமானத்தை பறக்கவிட்ட அடையாளம் தெரியாத நபர் மீது அப்நகர் போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் அப்நகர் காவல் நிலைய எல்லையில் ‘காம்பாட் ஆர்மி ஏவியேஷன்’ பயிற்சிப் பள்ளி (சிஏடிஎஸ்) செயல்பட்டு வருகிறது. தடை ெசய்யப்பட்ட ராணுவப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 800 அடி உயரத்தில் ஆளில்லா விமானம் (டிரோன்) பறப்பதாக அங்குள்ள அதிகாரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதையடுத்து அவர் அந்த ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்துவதற்காக உயர் அதிகாரிகளிடம் அனுமதி கோரும் முன்பாக, அந்த ஆளில்லா விமானம் தடை செய்யப்பட்ட பகுதியை விட்டு வெளியேறியது. இதுதொடர்பாக அப்நகர் போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில், தடை செய்யப்பட்ட பகுதியில் ஆளில்லா விமானத்தை பறக்கவிட்ட சந்தேக நபர் மீது ஐபிசி பிரிவுகள் 336, 287, 188 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு  செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்நகர் காவல் நிலையத்தின் ஏபிஐ ராகேஷ் பாம்ரே கூறுகையில், ‘ராணுவ பயிற்சி பள்ளி எல்லைக்குள் டிரோன் பறக்க கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் தடை விதிக்கப்பட்டது. இச்சம்பவத்தில் ட்ரோனை பறக்கவிட்ட நபர் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.