திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் அருகே நெரும்பூர் கிராமம், யாதவாள் தெருவை சேர்ந்தவர் பார்த்தசாரதி. விவசாயி. இவரது மகன் மோகன் (14). இவர், நெரும்பூரில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன் அப்பள்ளி ஆசிரியர் ஞானசேகரன் பொறுப்பில், நெரும்பூர் அரசு பள்ளியை சேர்ந்த மோகன் உள்பட 15 மாணவர்கள், கல்பாக்கம் அருகே அனுபுரத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றனர். பின்னர் மாலை போட்டி முடிந்ததும், தனது பள்ளி மாணவர்களை விட்டுவிட்டு ஆசிரியர் ஞானசேகரன் தனியே கிளம்பி சென்றுவிட்டார்.
பின்னர் தங்கள் ஊருக்கு செல்ல மோகன் உள்பட 15 மாணவர்களும் கல்பாக்கத்துக்கு வந்தனர். அங்கு கடலில் குளித்தனர். அப்போது ஒரு ராட்சத அலை எழும்பி மோகனை கடலுக்குள் இழுத்து சென்றுவிட்டது. பின்னர் நேற்றிரவு கல்பாக்கம் அருகே மெய்யூர் குப்பம் பகுதியில் மோகனின் சடலம் கரை ஒதுங்கியது. இப்புகாரின்பேரில் கல்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இந்நிலையில், தனது பொறுப்பில் அழைத்து சென்ற மாணவர்களை பத்திரமாக திருப்பி அழைத்து வராத பள்ளி ஆசிரியர் ஞானசேகரன்மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நெரும்பூர் கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, இன்று காலை நெரும்பூர் அரசு பள்ளியை 200க்கும் மேற்பட்ட மக்கள் முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அப்பள்ளி மூடப்பட்டது.
இதையடுத்து திருக்கழுக்குன்றம்-கல்பாக்கம் சாலையில் 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அமர்ந்து, பள்ளி ஆசிரியர்மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது. இதுகுறித்து தகவலறிந்ததும் திருக்கழுக்குன்றம் போலீசார் விரைந்து வந்தனர். அங்கு மறியலில் ஈடுபட முயற்சித்த மக்களிடம் சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்மீது துறைரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர். இதை ஏற்று கிராம மக்கள் கலைந்து சென்றனர்.