பொதுவாக அரசியல் தலைவர்களின் பெயர்களை அல்லது வாழ்ந்து மறைந்த பிரபலங்களின் பெயர்களைத் தெருக்களுக்கோ, நகரத்திற்கோ சூட்டி கௌரவிப்பது வழக்கம். ஆனால் வாழும்போதே இது போன்ற பெருமைகளைப் பெறுபவர்கள் சிலர்தான். அந்த வகையில் நம் நாட்டின் இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மானைக் கௌரவிக்கும் விதமாகக் கனடா அரசு தங்கள் நாட்டில் உள்ள ‘Markham’ எனும் நகரத்தில் உள்ள தெருவுக்கு ‘ஏ.ஆர்.ரஹ்மான் தெரு’ (A.R.Rahman street) எனப் பெயர் சூட்டிப் பெருமைப்படுத்தியுள்ளது. இது முதல்முறை அல்ல, ஏற்கெனவே கடந்த 2013ம் ஆண்டு ‘அல்லா ரக்கா ரஹ்மான்’ என ஏ.ஆர். ரஹ்மான் பெயரை ஒரு தெருவுக்குச் சூட்டியிருந்தது கனடா அரசு. இதையடுத்து தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக ஏ.ஆர். ரஹ்மானைக் கௌரவித்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார் ஏ.ஆர். ரஹ்மான்.
“இதை நான் எதிர்பார்க்கவில்லை. கனடாவின் Markham பகுதி மேயர், கவுன்சிலர்கள், இந்தியத் தூதரக ஜெனரல் மற்றும் கனடா மக்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள். உண்மையில் ‘ஏ.ஆர். ரஹ்மான்’ என்பது எனக்குச் சொந்தமான பெயர்மட்டுமல்ல. அதன் பொருள் ‘கருணையாளர்’ என்பதாகும். இது நம் அனைவருக்கும் இருக்கும் பொதுவான இறைவனின் குணம். அந்த கருணையாளரான இறைவனின் ஊழியராக மட்டுமே நாம் இருக்க முடியும். எனவே அந்தப் பெயர் கனடாவில் வாழும் அனைத்து மக்களுக்கும் அமைதி, செழிப்பு, மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியத்தைக் கொண்டு வரட்டும். கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக!
மேலும், இந்த எல்லா அன்பிற்கும் இந்தியாவின் சகோதர சகோதரிகளுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். என்னுடன் பணியாற்றிய அனைத்து படைப்பாளிகளும், மூத்த கலைஞர்களும் சினிமாவின் நூறாண்டுகளைக் கொண்டாடவும், எழுச்சி பெறவும் எனக்கு உத்வேகம் அளித்தவர்கள். நான் பெருங்கடலின் ஒரு சிறிய துளி.
எனக்களித்திருக்கும் இந்த கெளரவம், நான் இன்னும் புதிதாகப் பலவற்றைச் செய்வதற்கும், ஊக்கமளிப்பதற்கும் உந்துதலாகவும் கூடுதல் பொறுப்பைத் தருவதாகவும் இருக்கும் என்று உணர்கிறேன். சோர்வடையாமல் ஓய்வு பெறாமல் இன்னும் சிறப்பாக வேலை செய்வேன். அப்படியே சோர்வடைந்தாலும் இன்னும் நான் செய்ய வேண்டிய கடமைகள் நிறைய இருக்கின்றன. எல்லைகளைக் கடந்து மக்களை இணைக்க வேண்டும் என்பதை எப்போதும் நினைவில் வைத்திருப்பேன். எல்லா புகழும் இறைவனுக்கே!” என்று பதிவிட்டுள்ளார்.