அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தை தரப்பினர் விரைவில் நடத்த இருப்பதாகவும், இந்தக் கூட்டத்தில், வி.கே.சசிகலா கலந்து கொள்வார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஜூலை மாதம் 11 ஆம் தேதி, அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக, எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அதே நாளில், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை அவர் நீக்கினார். இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழுக் கூட்டத்திற்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தீர்ப்பு அளித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டம் செல்லாது என்றும், இடைக்காலப் பொதுச் செயலாளராக, எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்றும், அதிமுகவில், ஜூன் மாதம் 23 ஆம் தேதி இருந்த நிலையே தொடரும் என்றும் தீர்ப்பு அளித்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதைத் தொடர்ந்து, அதிமுக நலன் கருதி, மீண்டும் இணைந்து செயல்பட வரும்படி, எடப்பாடி பழனிசாமிக்கு, ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்தார். இதே போல், வி.கே.சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோருக்கும் அவர் அழைப்பு விடுத்தார். இதை வெளிப்படையாக மறுத்த எடப்பாடி பழனிசாமி, தீர்ப்புக்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்கள் முடிவடைந்ததை அடுத்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், சென்னையில், அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தை விரைவில் நடத்த, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுகவில்,
, டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும் சேர்க்க, ஓ.பன்னீர்செல்வம் ஒப்புதல் தெரிவித்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமியை கழற்றி விட்டு விட்டு, பொதுக்குழுக் கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் என, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தெரிவித்து வரும் நிலையில், அவரது சம்மதத்துடன், அதாவது, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் ஆகியோர் தலைமையில், பொதுக்குழுக் கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்கும்படி, வி.கே.சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோருக்கு, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் அழைப்பிதழ் அனுப்பவும் முடிவு செய்துள்ளனர். இதற்கிடையே, வி.கே.சசிகலாவை, ஓ.பன்னீர்செல்வம் விரைவில் சந்திக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இருவரும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கிய இடத்தில் நடைபெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வி.கே.சசிகலாவுக்கு ஆதரவு நிலைப்பாட்டை ஓ.பன்னீர்செல்வம் ஆயுதமாக கையில் எடுத்துள்ளதால், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வி.கே.சசிகலா – ஓ.பன்னீர்செல்வம் – டிடிவி தினகரன் கூட்டணியை வீழ்த்தி, அதிமுக தலைமைப் பதவியை, எடப்பாடி பழனிசாமி எப்படி கைப்பற்றப் போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.