ராசிபுரத்தில் வரலாறுகாணாத கனமழையால் ராசிபுரம் அரசு மருத்துவமனை மழை நீரில் மூழ்கியுள்ளது. இதனையடுத்து பயத்தில் நோயாளிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து மாலை நேரத்தில் வரலாறு காணாத மழை பெய்ய தொடங்கியது. சுமார் 3 மணி நேரமாக தொடர்ந்து பெய்த கனமழை 20 செண்டி மீட்டராக பதிவான நிலையில், ராசிபுரம் நகரமே நீரில் மூழ்கியது.
இதில் ராசிபுரம் அரசு மருத்துவமணை நீரில் மூழ்கியதால் பயத்தில் 45 க்கும் மேற்பட்ட நோயாளிகள் பாதிப்பிற்குள்ளாயினர். பின்னர் நோயாளிகள் ஊழியர்களால் பத்திரமாக மீட்கப்பட்டு மாற்று அறையில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் மழைநீர் வீடுகளில் புகுந்ததால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாயினர். தொடர் மழை காரணமாக ராசிபுரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதில் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாயினர்.
இந்நிலையில் ராசிபுரத்தில் ஏற்பட்டிருக்கும் கனமழை எதிரொலியை அடுத்து சம்பந்தப்பட்ட அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்விற்கு பிறகு, மழை நீரை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். மேலும் வரும் காலங்களில் மழைநீர் தேங்கி நிற்காதவாறு அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM