ரிலையன்ஸ் சில்லறை வணிகத்தின் புதிய தலைவராக உருவெடுத்தார் இஷா முகேஷ் அம்பானி

மும்பை: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்  தலைவர் முகேஷ் அம்பானி மகள் இஷா அம்பானியை தனது குழுமத்தின் சில்லறை வணிகத்தின் புதிய தலைவராக அறிமுகப்படுத்தினார். சாதனை பதிவை செய்துள்ள ரிலையன்ஸ் குழுமத்தின் சில்லறை வணிகப் பிரிவு, ₹2 லட்சம் கோடி வருவாயை எட்டியதாகவும், ஆசியாவின் முதல் 10 சில்லறை விற்பனையாளர்களுள் ஒன்றாக இருப்பதாகவும் முகேஷ் அம்பானி தெரிவித்தார். திங்கள்கிழமை (ஆகஸ்ட் 29) நடைபெற்ற ரிலையன்ஸ் நிறுவனத்தின் 45 வது ஆண்டு பொதுக் கூட்டத்தில் இந்தத் தகவலை வெளியிட்டார். மகள் இஷா அம்பானியை தனது குழுமத்தின் சில்லறை வணிகத்தின் புதிய தலைவராக அறிமுகப்படுத்தப்பட்டது, உலகின் பணக்கார குடும்பங்களில் ஒன்றின் வாரிசு, குடும்ப தொழிலுக்கு இறக்கப்பட்டிருக்கும் அறிவிப்பும் இந்தக் கூட்டத்தில் வெளியானது.

30 வயதான இஷா, ரிலையன்ஸின் பொதுக்குழுவில் கலந்துக் கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய இஷா அம்பானி, மளிகை ஆர்டர்களை வைப்பது மற்றும் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தி பணம் செலுத்துவது குறித்து விளக்கமளித்தார். “இந்த ஆண்டு, நாங்கள் எங்கள் FMCG பொருட்கள் வணிகத்தை தொடங்குவோம்,” என்று அவர் கூறினார்.

இந்திய கைவினைஞர்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களையும் ரிலையன்ஸ் ரீடெய்ல் சந்தைப்படுத்தத் தொடங்கும் என்றும் தெரிகிறது. “இந்தியாவின் செழுமையான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கான எங்கள் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, பழங்குடியினர் மற்றும் பிற விளிம்புநிலை சமூகங்களால் உற்பத்தி செய்யப்படும் தரமான பொருட்களை இந்தியா முழுவதும் விரைவில் சந்தைப்படுத்தத் தொடங்குவோம்” என்று இஷா தெரிவித்தார்.

ரிலையன்ஸ் ரீடெய்ல் EBITDA (வட்டி, வரிகள், தேய்மானம் மற்றும் கடனடைப்புக்கு முந்தைய வருவாய்) ₹12,000 கோடி என்று தெரிவித்துள்ளது. நிறுவனம் இந்த ஆண்டு மட்டும் 2,500 கடைகளைத் திறந்துள்ளதை அடுத்து அதன் எண்ணிக்கை 15,000 ஆக அதிகரித்துள்ளது.

யேல் பல்கலைக்கழகத்தில் படித்தவர் இஷா என்பது குறிப்பிடத்தக்கது. 65 வயதான முகேஷ் அம்பானிக்கு ஆகாஷ் மற்றும் இஷா இருவரும் இரட்டைக் குழந்தைகள். இவர்கள் இருவரைத் தவிர ஆனந்த் என்ற மகனும் உண்டு.  ரிலையன்ஸ் ஜியோவின் டெலிகாம் பிரிவின் தலைவராக ஆகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ரிலையன்ஸ் ரீடெய்ல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகியவை குடும்பத்தின் ஆயில்-டு-டெலிகாம் குழுமத்தின் துணை நிறுவனங்களாகும், இதில் $217 பில்லியன் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் முதன்மை நிறுவனமாகும். முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.