14வது ஊதிய ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்க! – ஜி.கே.வாசன் வலியுறுத்தல்!

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கான 14வது ஊதிய ஒப்பந்த நிறைவேற்றம் எதிர்பார்ப்பிற்கு நேர் மாறாகவும், மிகுந்த ஏமாற்றத்தையும் அளித்திருக்கின்றது என்று ஜி.கே.வாசன் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றிவரும் தொழிலாளர்களுக்கான 14 – வது ஊதிய ஒப்பந்த நிறைவேற்றம் எதிர்பார்ப்பிற்கு நேர் மாறாகவும் , மிகுந்த ஏமாற்றத்தையும் அளித்திருக்கின்றது.

தற்பொழுது வழங்கப்படுவதாக அறிவித்துள்ள 5 சதவீத ஊதிய உயர்வு , கடந்த இரு ஒப்பந்தங்களை விட குறைவானதோடு மட்டுமல்லாமல், அரசு ஊழியர் நிகர சம்பளத்தைவிட மிகவும் குறைவான உயர்வாகவே உள்ளது. 2020 – ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு வயது முதிர்வு, விருப்ப ஓய்வு பெற்றுள்ளோர்களுக்கும், காலமான தொழிலாளர் குடும்பத்தினருக்கும், வழங்கப்பட வேண்டியுள்ள பணப்பலன்கள் வழங்குவது குறித்து நிதி ஒதுக்கீடோ, வழங்குவதற்கான அறிவிப்பும் இல்லாதது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

இவற்றை எதிர்நோக்கி பல்வேறு பிரச்சனைகளில் பல குடும்பங்கள் காத்துக்கொண்டு இருக்கிறது . ஓய்வு பெற்றுள்ள தொழிலாளர்களுக்கு பிற பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அகவிலைப்படி உயர்வு வழங்குவது குறித்தும், 12வது ஒப்பந்தத்தில் ஊதிய உயர்வின் பலன்கள் 15 சதவீத அளவில் அளித்திடும் சரத்து உள்ளது போல், தற்பொழுது செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் உயர்வு அறிவிப்பு இல்லாததும் பெருத்த ஏமாற்றத்தை அளித்திடும் ஒப்பந்தமாகவே உள்ளது .

பல்வேறு போராட்டங்களை வயதான காலத்திலும் நடத்தி , அவை வெற்றிபெறும் என்று ஆவலோடு எதிர்பார்த்திருந்த நிலையில் அவர்களுக்கான அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.மேலும், ஊதிய ஒப்பந்த கால அளவு 3 ஆண்டுகளாக இருந்து வந்ததை , தற்பொழுது 4 ஆண்டுகளாக மாற்றியமைத்துள்ளது.

இதை அனைத்து தொழிற் சங்கங்களுமே ஏற்றுக் கொள்ளாத நிலையில் , அவற்றை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று போக்குவரத்து தொழிலாளர்களிடம் இருந்தும் , தொழிற் சங்கங்களிடம் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது. இவற்றை உரியமுறையில் ஆலோசனை செய்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.