புதுடெல்லி: “ராகுல் காந்தி ஒரு நல்ல மனிதர். ஆனால் அவரிடம் அரசியல் சூட்சுமமும், கடின உழைப்பும் இல்லை” என்று குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்தையும் துறந்து கட்சியிலிருந்து விலகி அதிர்ச்சி கொடுத்த மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் அண்மையில் தனியார் தொலைக்காட்சிக்கு ஒரு பேட்டியளித்தார். அதில், “ராகுல் காந்தி ஒரு நல்ல மனிதர்; ஆனால் அவரிடம் அரசியல் சூட்சுமமும், கடின உழைப்பும் இல்லை” என்று கூறியுள்ளார். தனது பதவி விலகல் கடிதத்தில் 5 பக்கங்களில் அதிகமாக ராகுலை சாடியிருந்தார் குலாம் நபி ஆசாத். இந்நிலையில், இந்தப் பேட்டி அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.
அந்தப் பேட்டியில் குலாம் நபி ஆசாத் கூறியதாவது: “காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி, கட்சியின் முக்கியமான முடிவுகளை எடுக்கும் அதிகாரமிக்க ஒரு குழு. ஆனால், தற்போது அர்த்தமற்றதாகிவிட்டது. இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி காலத்தில் கட்சியில் இருந்த கலந்தாலோசிக்கும் முறை தற்போது முற்றிலுமாக வழக்கொழிந்துவிட்டது. அதை சிதைத்துவிட்டனர் என்றே சொல்ல வேண்டும்.
முன்பெல்லாம் காங்கிரஸ் காரிய கமிட்டியில் அதன் உறுப்பினர்கள் மட்டும்தான் இருப்பார்கள். ஆனால், இப்போது அந்த காரிய கமிட்டியில் 25 உறுப்பினர்கள், 50-க்கும் மேற்பட்ட சிறப்பு அழைப்பாளர்கள் இருக்கின்றனர்.
சோனியா காந்தி 1998 முதல் 2004 வரை மூத்த தலைவர்களுடன் கலந்தாலோசிப்பார். மூத்த தலைவர்களின் பரிந்துரைகளை முழுமையாக ஏற்றுக் கொள்வார். ஆனால், 2004ல் காங்கிரஸ் கட்சிக்குள் ராகுல் காந்தி வந்த பின்னர் சோனியா ராகுலையே அதிகம் சார்ந்திருக்க ஆரம்பித்துவிட்டார். ராகுல் காந்திக்கு அரசியல் செய்யும் சூட்சுமம் தெரியாது. அதற்கான திறன் இல்லை. அதனால் ராகுல் காந்திக்கு மூத்த தலைவர்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று சோனியா காந்தி விரும்பினார்.
ஆனால், ராகுல் காந்தி பொறுப்பேற்றவுடன் அவர் யார் சொல்வதையும் கேட்பதாக இல்லை. நிறைய முறை வெவ்வேறு திட்டங்களை எடுத்துரைத்துக் காத்திருப்போம். ஆனால் எதுவும் செயல்பாட்டுக்கு வரவில்லை. கட்சியின் வளர்ச்சிக்காக நாங்கள் முன்வைத்த பரிந்துரைகள் அனைத்துமே இன்னமும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் கிடப்பில் கிடக்கிறது. காங்கிரஸ் நிலையை உயர்த்த எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலின் போது ராகுல் காந்தி ’பாதுகாவலர் தான் திருடர்’ “Chowkidar Chor Hai (the gatekeeper is the thief)” என்ற பிரச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக முன்னெடுத்தார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் யாருமே அதை ஆதரிக்கவில்லை. அவர் அந்த சொல்லாடலை அறிவித்தபோது நான், மன்மோகன் சிங், ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோணி ஆகியோர் அங்கிருந்தோம். நாங்கள் யாருமே அதை ஏற்கவில்லை. ஏனெனில், நாங்கள் இந்திரா காந்தியிடம் அரசியல் பாடம் பெற்றோம்.
நான் இளநிலை அமைச்சராக இருந்தபோது அவர் என்னையும் எம்.எல். ஃபொடேடரையும் அழைத்தார். நாங்கள் இருவருமே அவ்வப்போது அடல் பிஹாரி வாஜ்பாயை சந்திக்க வேண்டும் என்றார். அவர் எங்களுக்குக் கற்றுக் கொடுத்த பாடம் என்னவென்றால் நாங்கள் எதிர்க்கட்சித் தலைவர்களை சந்திக்க வேண்டும். எங்களைவிட வயதில் பெரியவர்களை மதிக்க வேண்டும் என்பதே. மூத்த தலைவர்களை மோசமாக விமர்சிக்க நாங்கள் பழக்கப்படுத்தப்படவில்லை.
ஆனால், ராகுல் காந்தியின் கொள்கையே மோடியை எல்லா வகையிலும் தாக்குவதாக மட்டுமே இருந்தது. இதுபோன்ற தனிப்பட்ட விமர்சனங்களில் எங்களுக்கு உடன்பாடில்லை. எங்களைப் போன்ற மூத்த தலைவர்கள் பிரயோகப்படுத்தும் வார்த்தைகளை ராகுல் பிரச்சாரத்துக்காக தயார் செய்யவில்லை. அப்போதிருந்தே விரிசல் உருவாகிவிட்டது எனலாம்.
மற்றபடி தனிப்பட்ட முறையில் எனக்கு ராகுல் காந்தி மீது எவ்வித விரோதமும் இல்லை. அவர் ஒரு நல்ல நபர். ஆனால், ஓர் அரசியல்வாதிக்கான சூட்சுமமும், திறமையும் அவருக்கு இல்லை. அதேபோல் அவர் கடின உழைப்பாளியும் இல்லை” என்று குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.