மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கின் விசாரணையை முடிக்க கீழ் நீதிமன்றத்துக்கு இறுதியாக 4 மாத அவகாசம் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ். இவரது மகன் பென்னிக்ஸ். இவர்கள் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்தனர். கரோனா ஊரடங்கின் போது ஊரடங்கு கட்டுப்பாட்டு நேரம் தாண்டி கடையை திறந்து வைத்திருந்ததாக தந்தை, மகனை போலீஸார் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு வைத்து போலீஸார் கடுமையாக தாக்கியதில் இருவரும் அடுத்தடுத்து இறந்தனர்.
இது தொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலைய அப்போதைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உட்பட 9 பேரை சிபிஐ போலீஸார் கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது. இந்த வழக்கு விசாரணையை விரைவில் முடிக்கக் கோரி ஜெயராஜ் மனைவி ஜெயராணி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், சாத்தான்குளம் கொலை வழக்கு விசாரணையை 6 மாதத்தில் முடிக்க உத்தரவிட்டது.
இந்நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாக விசாரணையை 6 மாதத்தில் முடிக்க முடியவில்லை. இதனால் விசாரணையை முடிக்க மேலும் கால அவகாசம் வழங்க வேண்டும் எனக்கேட்டு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்று 5 மாத கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி கே.முரளிசங்கர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாவட்ட நீதிமன்றம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், இந்த வழக்கில் 105 சாட்சிகள் உள்ளனர். இதில் 40 சாட்சிகள் மட்டுமே விசாரிக்கப்பட்டுள்ளனர். 105 பேரில் 55 முதல் 60 வது வரையிலான சாட்சிகள் முக்கிய சாட்சியமாக கருதப்படுகிறது. கடந்த வாரம் 400 பக்க கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
வாரம் 2 நாள் என விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றம்சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர்கள் சாட்சிகளை குறுக்க விசாரணை செய்வதால் விசாரணையில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் 4 மாதம் கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும்’ எனக் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து சாத்தான்குளம் கொலை வழக்கு விசாரணையை முடிக்க இறுதியாக 4 மாத கால அவகாசம் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.