கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் ஏற்பட்ட கலவரத்தின் போது, மாடு திருடியதாக கைது செய்யப்பட்ட 4 பேரை, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஜூலை 13ஆம் தேதி பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, மாணவியின் மரணத்திற்கு நீதிகேட்டு, ஜூலை 17ஆம் தேதி நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது.
இந்த கலவரத்தின்போது பள்ளியின் பேருந்து மற்றும் பொருட்கள் மற்றும் போலீஸ் வாகனங்கள் என பல்வேறு வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கலவரம் தொடர்பாக 350-க்கும் மேற்பட்டவர்களை தனிப்படை போலீசார் கைது செய்து உள்ளனர். பள்ளி கலவரத்தில் வீடியோ மற்றும் சிசிடிவி காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் கைது நடவடிக்கையை அதிரடியாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தக் கலவரத்தின்போது அந்தப் பகுதியில் செல்ஃபோன் நெட்வொர்க் மற்றும் சாலை நடுவே உள்ள சிசிடிவி கேமராக்களைக் கொண்டு ஆய்வு மேற்கொண்டுவரும் போலீஸார், கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். வன்முறையை தூண்டுதல், போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தல் என இந்த விவகாரம் தொடர்பாக போலி தகவல்களை பரப்பியவர்களும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்த கலவரத்தின் போது மாட்டின் உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்து, மாடுகளை திருடி சென்றதாகவும் மற்றும் காவல்துறை வாகனத்திற்கு தீ வைத்ததாகவும் 4 பேரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த பூவரசன், புது பல்லகசேரி கிராமத்தைச் சேர்ந்த பரமேஸ்வரன், கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த வசந்தன் மற்றும் கடலூர் மாவட்டம் சிறு கிராமம் பகுதியைச் சேர்ந்த சஞ்சீவி ஆகிய இந்த நான்கு பேரையும், ஓராண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் ஷர்வன் குமார் உத்தரவிட்டுள்ளார்.