கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 திட்டம் எப்போது துவக்கம்?

தமிழகத்தில் இதுவரை செயல்படுத்தப்பட்டு வந்த மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் என்ற பெயரில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்றத்தில் 2022-2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், “அரசு பள்ளிகளில் 6 – 12 வரை படித்து உயர் கல்வியில் சேரும் (பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்கல்வி) அனைத்து மாணவிகளுக்கும் அவர்கள் படிப்பை முடிக்கும் வரை மாதம் ரூ.1000 வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். அம்மாணவிகள் பிற திட்டங்களில் உதவித்தொகை பெற்றிருந்தாலும், மாதம் ரூ.1000 வழங்கப்படும்.” என்றார்.

அத்துடன், நடப்பாண்டில் இருந்தே, அரசு பள்ளியில் இருந்து கல்லுாரிகளுக்கு சென்று முதல், இரண்டு, மூன்றாவது ஆண்டு படிக்கும் பெண்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, முதலாம் ஆண்டை தவிர பிற ஆண்டுகளில் பயிலும் தகுதியான மாணவிகளிடம் இருந்து சான்றிதழ்களை பெற அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் உயர்கல்வித்துறை அண்மையில் உத்தரவிட்டிருந்தது. . 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்றதற்கான சான்று, கல்லூரி அடையாள அட்டை, ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங்களை பெறுமாறு அறிவுறுத்தப்பட்டது.

மேலும், இளநிலை கல்வி பெறும் அனைத்து மாணவியரும் (இளநிலை முதலாம் ஆண்டு சேரும் மாணவியர்களும், இளங்கலை / தொழிற்கல்வி/ மருத்துவக் கல்வியில் 2ஆம் ஆண்டு முதல் 5ஆம் ஆண்டு வரை பயிலும் மாணவிகளும்) இத்திட்டத்திற்காகப் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் https://penkalvi.tn.gov.in வழியாக தங்கள் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்து வந்தனர்.

இந்த நிலையில், கல்லூரி மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை வருகிற செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த திட்டத்தின் துவக்க விழாவில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக பங்கேற்வுள்ளதாகவும், உதவித்தொகை பெறும் மாணவிகளின் எண்ணிக்கையை இறுதி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

திட்டத்திற்கான தொடக்க விழாவை சென்னையில் உள்ள பாரதி மகளிர் கலைக்கல்லூரியில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதுவரை 90 ஆயிரம் மாணவிகள் இந்த திட்டத்துக்கு தேர்வாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் டெல்லி சென்ற தமிழக முதல்வர் ஸ்டாலின், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து டெல்லியில் பாராட்டத்தக்க வகையில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளை பார்வையிட்டார் என்பது நினைவுகூரத்தக்கது.

முன்னதாக, பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தையும் முதல்வர் ஸ்டாலின் வருகிற செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி துவங்கி வைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக நிறுவனரும், மறைந்த முன்னாள் முதல்வருமான பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.