மதுரை: மதுரை மத்திய சிறைச்சாலையில் உள்ள கைதிகள் சுற்றுச்சூழலுக்கு உகந்த விதைப்பந்து விநாயகர் சிலைகள் தற்போது விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
மதுரை மத்திய சிறையில் 1500-க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் ஆயுள் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஆயுள் தண்டனை கைதிகள் தண்டனை காலம் முடிந்து, விடுதலையாகும் போது, அவர்களுக்கு சுயவேலை வாய்ப்பை ஏற்படுத்தும் விதமாக சிறை வளாகத்திற்குள் பல்வேறு தொழில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியின் மூலம் பூந் தொட்டிகள், சிமெண்ட் கிராதிகள், மருத்துவ பேண்டேஜ், இனிப்பு வகைகள் போன்ற பொருட்களை கைதிகள் தயாரிக்கின்றனர். இப்பொருட்கள் சிறைத்துறை அங்காடி மூலம் விற்கப்படுகின்றன.
விநாயகர் சதுர்த்தியையொட்டி மதுரை சிறையில் விதவிதமான களிமண் விநாயகர் சிலைகளை ஆயுள் தண்டனை கைதிகளால் தயாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. குறிப்பாக வேப்பு, வேங்கை உள்ளிட்ட நாட்டு மரங்களின் விதை பந்துக்களை களிமண் சிலைக்குள் வைத்து தயாரித்துள்ளனர். வீடுகளில் வைத்து வணங்கிய பிறகு, இச்சிலைகளை சிறிய நீர்நிலைகளில் கரைக்கும்போது, அதன் விதைகள் கரையோரத்தில் ஒதுங்கி மரமாக உருவாக வாய்ப்பு ஏற்படும் என்பதால் இம்முயற்சியை சிறைத்துறை நிர்வாகம் மேற்கொண்டுள்ளதாக கைதிகள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து சிறை நிர்வாகம் கூறுகையில், ‘‘சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், நீர்நிலைகளை யொட்டி மரங்களை உருவாக்கும் நோக்கிலும் இம்முயற்சி மேற்கொண்டோம், சுமார் 500-க்கும் மேற்பட்ட விதைப் பந்து சிலைகள் சிறைத் துறை அங்காடி மூலம் விற்கப்படுகின்றன’’ என்றனர்.