கேரளா மாநிலம் கொச்சி தோப்பன்பட்டியின் மின் கம்பத்தின் உச்சியில் சிக்கி கொண்ட மலைப்பாம்பை வனத்துறை ஊழியர் லாவகமாக மீட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கேரளா மாநிலம் கொச்சி தோப்பன்பட்டி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை சாலையோரம் உள்ள மின் கம்பத்தின் உச்சியில் மலைப்பாம்பு ஒன்று சிக்கிக்கொண்டது. மின் கம்பத்தில் ஏறிய அந்த மலைப்பாம்பு மின்கம்பத்தின் உச்சிக்கு சென்றபோது அதில் செல்லும் மின் கம்பி மற்றும் கேபிள் ஒயர்களில் சிக்கி நகர முடியாமல் தவித்தது. இதைக் கண்ட பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை ஊழியர் ஏணி மூலம் மின்கம்பத்தில் ஏறி, மின்கம்பத்தில் சிக்கிய மலைப்பாம்பை லாவகமாக மீட்டு கீழே கொண்டு வந்தார். பின்னர் அந்த மலைப்பாம்பு சாக்கு மூட்டையில் போட்டு கட்டப்பட்டு அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு விடப்பட்டது. தற்போது அந்த பாம்பை வனத்துறை ஊழியர் மீட்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM