பீகார் மாநிலத்தில் விசாரணை நடத்த சிபிஐக்கு தரப்பட்டிருந்த பொது அனுமதியை முதலமைச்சர் நிதிஷ் குமார் அரசு ரத்து செய்துள்ளது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிய ஐக்கிய ஜனதா தளம் கட்சி நிறுவனரும், பீகார் மாநில முதலமைச்சருமான நிதிஷ் குமார், பழையக் கூட்டணி கட்சியான, லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியுடன் மீண்டும் இணைந்து, ஆட்சி அமைத்துள்ளார்.
பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக, எட்டாவது முறையாக, நிதிஷ் குமார் பதவி ஏற்ற நிலையில், துணை முதலமைச்சராக, தேஜஸ்வி யாதவ் பதவி ஏற்றனர். ஆட்சி பொறுப்பேற்றப் பிறகு ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் முக்கிய தலைவர்கள் வீடுகளில் சிபிஐ சோதனை மேற்கொண்டது.
சமீபத்தில் லாலு பிரசாத் யாதவிற்கு நெருக்கமான ஆர்ஜேடி கட்சி பிரமுகர்களின் இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும், லாலு பிரசாத் குடும்பத்தினர் தொடர்புடைய வேலைவாய்ப்பு மோசடி குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது. கூட்டணி கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர்களின் வீடுகளில் சிபிஐ சோதனை நடைபெற்று வருவது, முதலமைச்சர் நிதிஷ் குமார் அரசுக்கு பெரும் தலைவலியாக மாறி உள்ளது.
இந்நிலையில் பீகார் மாநிலத்தில் விசாரணை நடத்த சிபிஐக்கு தரப்பட்டிருந்த பொது அனுமதியை முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு ரத்து செய்துள்ளது. இதனால், இனி அம்மாநில அரசின் அனுமதி அல்லது நீதிமன்ற உத்தரவுப்படி மட்டுமே விசாரணை, சோதனை நடவடிக்கைகளை சிபிஐ எடுக்க முடியும்.
நிதிஷ் குமாரின் இந்த முடிவை விமர்சித்துள்ள எதிர்க்கட்சியான பாஜக, ஊழல்வாதிகளை பாதுகாக்கவே நிதிஷ் குமார் இந்த முடிவை எடுத்து உள்ளதாகவும், இந்த முடிவு கூட்டாட்சிக்கு தத்துவத்திற்கு எதிரானது என்றும் பாஜக சாடியுள்ளது.