பணியாளர் மட்ட ஒப்பந்தத்தை எட்டிய பிறகு, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஏற்பாட்டிற்கான முழு ஒப்புதலுக்கு 6 மாதங்கள் செல்லும் என்று தெரிவிக்கப்படுள்ளது.
நாட்டின் வெளி கடனாளர்களுடன், குறிப்பாக சீனாவுடனான கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை சவால்களைக் கருத்தில் கொண்டு, இந்த ஆறு மாதங்கள் என்ற காலத்தை நிபுணர்கள் குறித்துள்ளனர்.
தற்போது இலங்கையில் இருக்கும் IMF பணியாளர் குழு, பணியாளர் அளவிலான
உடன்பாட்டை எட்டுவதற்கான நோக்கத்துடன் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தி
வருகிறது.
இந்த பணி புதன்கிழமை முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
மற்றும் பேச்சுவார்த்தைகளின் முடிவில் பணியாளர்கள் அளவிலான உடன்பாட்டை
எட்டுவதற்கு மத்திய வங்கி எதிர்பார்க்கிறது.
நந்தலால் வீரசிங்கவின் நம்பிக்கை
சீனா உட்பட அனைத்து வெளிநாட்டுக் கடனாளிகளும் டிசம்பர் மாதத்தில் நிதி
உறுதிப்பாட்டைப் பெறுவதற்கு அரசாங்கத்துடன் ஒத்துழைப்பார்கள் என்ற
எதிர்பார்ப்புடன், இந்த ஆண்டு இறுதிக்குள் உத்தேசிக்கப்பட்ட IMF
வேலைத்திட்டத்தின் முதல் தவணை வழங்கப்படுமென மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி
நந்தலால் வீரசிங்க, நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் பணியாளர் மட்ட உடன்படிக்கையை எட்டிய பின்னர்,
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு ஆலோசகர்கள் உத்தியோகபூர்வமாக நாட்டின் இருதரப்பு
மற்றும் வணிகக் கடன் வழங்குநர்களை அணுகி அவர்களிடமிருந்து நிதி உறுதிமொழிகளைப்
பெற எதிர்ப்பார்க்கின்றனர்.
வழக்கமாக இது ஒரு பணியாளர் நிலை ஒப்பந்தம் மற்றும் ஒரு முழு ஒப்பந்த
திட்டத்திற்கு இடையே சில வாரங்களே ஆகும், எனினும் ஒரு நாட்டின் கடன் தாங்க
முடியாததாக இருக்கும் போது, போதுமான நிதி உத்தரவாதங்கள் உள்ளன என்பதை
நிரூபிக்கும் வரை, பணியாளர் அளவிலான ஒப்பந்தத்திலிருந்து ஒரு முழு
திட்டத்திற்கு செல்ல முடியாது.
இதுவே இலங்கை விடயத்தில் இடம்பெறுகிறது என்று மத்திய வங்கியின் முன்னாள்
ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி கடந்த வாரம் ஸ்ரீ ஜயவர்தனபுர
பல்கலைக்கழகத்தின் வணிகப் பொருளாதாரத் துறை ஏற்பாடு செய்திருந்த மெய்நிகர்
மாநாட்டில் தெரிவித்தார்.
IMF திட்டத்திற்கான அனுமதி
இந்தநிலையில் அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியர்
பிரேம சந்திர அத்துகோரல, இலங்கைக்கு IMF திட்டத்திற்கு அனுமதி கிடைக்க இன்னும்
6-7 மாதங்கள் ஆகலாம் என கருத்து தெரிவித்துள்ளார்.
“சாம்பியா நாடு, சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியது,
அவர்கள் 2020 டிசம்பரில் IMF உடன் ஒரு ஊழியர் அளவிலான ஒப்பந்தத்தை எட்டினர்,
இருப்பினும், சீனர்கள் ஆரம்பத்தில் கடன் மறுசீரமைப்பில் பங்கேற்க தயங்கியதன்
காரணமாக, மொத்தத்தில், சீனாவுடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்துக்கு சுமார் 7
மாதங்கள் எடுத்தன என்று அவர் கூறினார்.
இதில் ஒரு திருப்புமுனையாக, பாரிஸ் கிளப்பில் உறுப்பினராக இல்லாத சீனா, இந்த
ஆண்டு மே மாதம் சாம்பியாவின் அதிகாரப்பூர்வ கடன் வழங்கும் குழுவில் இணைத்
தலைவராக இணைந்து IMF திட்டத்திற்கான சாம்பியாவின் கோரிக்கையை ஆதரித்தது.
“G-20 நாடுகளுடனான ஒப்பந்தத்தின் (G20’s Common Framework) காரணமாக சீனா தனது
அணுகுமுறையை மாற்றியுள்ள நிலையில், இலங்கை விவகாரத்தில் அதிக அனுதாபத்துடன்
இருக்க வேண்டும் என்று நிறைய பேர் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
அப்படி நடந்தால்,
ஆறு மாதங்களுக்குள் ஒப்பந்தம் இறுதி செய்யப்படும். இருப்பினும், இது
டிசம்பரில் நடக்கும் என்று நான் நினைக்கவில்லை என்று பேராசிரியர் பிரேம
சந்திர அத்துகோரல கூறியுள்ளார்.