மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் (டி.எம்.சி) மூத்த தலைவர்கள் பார்த்தா சாட்டர்ஜி, அனுப்ரதா மோண்டல் ஆகியோர் பள்ளி வேலை வாய்ப்பு விவகாரத்தில் ஊழல் மற்றும் மாடு கடத்தல் வழக்கில் கைதுசெய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து, திரிணாமுல் காங்கிரஸ் தலைமையிலான அரசின்மீது பா.ஜ.க ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறிவருகிறது.
இந்த நிலையில், கொல்கத்தாவில் தன்னுடைய கட்சியின் மாணவர் பிரிவின் பேரணியில் கலந்துகொண்ட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “எனக்கு எதிராகவும், கொல்கத்தா மேயர், மாநில அமைச்சர் ஃபிர்ஹாத் ஹக்கீம் மற்றும் கட்சியின் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி போன்ற மற்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கு எதிராக அவதூறான பிரசாரம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. பா.ஜ.க-வால் முடிந்தால் என்னைக் கைதுசெய்யட்டுமே பார்க்கலாம்!
பா.ஜ.க-வினர் மற்ற கட்சியினர் அனைவரையும் திருடர்கள் போலவும், பா.ஜ.க-வும், அதன் தலைவர்கள் மட்டுமே புனிதமானவர்கள் என்பது போலவும் பிரசாரம் செய்கின்றனர். நான் மட்டும் அரசியலில் இல்லையென்றால் அவர்களின் நாக்கைக் கிழித்திருப்பேன்.
இந்தியா முழுவதும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற அரசுகளை அகற்ற பா.ஜ.க சம்பாதித்த தவறான பணத்துடன், அமலாக்க இயக்குநரகம் (இடி), மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) போன்ற நிறுவனங்களைப் பயன்படுத்துகிறது. இதற்கெல்லாம் அவ்வளவு பணம் எப்படிக் கிடைக்கிறது என்பதை பா.ஜ.க தெளிவுபடுத்துமா? அது எப்படி சொல்லும்? ஹவாலா மூலம் வெளிநாடுகளில் பணத்தைக் குவித்து வருகிற கட்சித்தானே பா.ஜ.க.
மேற்கு வங்க மாநில அமைச்சர் ஃபிர்ஹாத் ஹக்கீம் அண்மையில் மத்திய அதிகாரிகளால் அழைக்கப்பட்டதால், விரைவில் அவர் கைதுசெய்யப்படலாம். ஆனால், அவர் கைதுசெய்யப்பட்டால், அவரை துன்புறுத்துவதற்கான போலி வழக்கு அது என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம். பள்ளி வேலைவாய்ப்பு ஊழலில் சாட்டர்ஜி கைதுசெய்யப்பட்டாலும், இதுவரை எதுவும் நிரூபிக்கப்படவில்லை. உண்மையில் பா.ஜ.க ஊடகங்கள், நீதித்துறை மற்றும் அரசியல் கட்சிகளைப் பயமுறுத்துகிறது, மேலும் மக்களின் சுதந்திரத்தைப் பறிக்க பெகாசஸைப் பயன்படுத்துகிறது” எனக் காட்டமாகப் பேசியிருக்கிறார்.