தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள தனது பண்ணை வீட்டில் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய ஆதரவாளர்களைச் சந்தித்து வருகிறார். மதுரை புறநகர் மாவட்ட கழகச் செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் நூற்றுக்கணக்கானோர் ஓ.பி.எஸ்-ஸை சந்தித்தனர்.
அப்போது ஆதரவாளர்களிடம் பேசிய ஓ.பி.எஸ், “ஜெயலலிதா மறைவுக்குப் பின்பு நடந்த பல்வேறு சோதனைகள், தர்மயுத்தத்துக்குப் பிறகு இன்றைக்கு நம்முடன் எதிரும் புதிருமாக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி தலைமையில் நான்காண்டுகள் அ.தி.மு.க ஆட்சி செய்தது.

பின்னர் யார் கண்பட்டதோ இன்றைக்கு நாம் பிரிந்திருக்கிறோம். அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். அதுவே முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மட்டுமல்லாமல் மக்களின் விருப்பமாக இருக்கிறது. ஆனால் அதனை சிலர் ஏற்கமறுக்கின்றனர்.
கடந்த ஜூன் 23-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்துக்கு நான் செல்லும்போது, என்னை வரவிடாமல் தடுப்பதற்காக வேண்டும் என்றே என் இல்லம் அமைந்திருக்கும் பகுதியில் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. ஆனால் காவல்துறையினர் உதவியுடன் பொதுக்குழு கூட்ட மேடைக்கு சென்றேன். அங்கேயும் எடப்பாடி பழனிசாமி வந்ததும் அவருடன் சேர்ந்து செல்லுங்கள் என மகாலிங்கம் சொன்னதால் அவருக்காக நான் காத்திருந்தேன். ஆனால் வந்ததும் என்னுடன் இணைந்து மேடைக்குச் செல்லாமல் எடப்பாடி பழனிசாமி தனியே சென்றார். அதையும் பெரிதுபடுத்தாமல் பொதுக்குழு கூட்ட மேடைக்கு சென்றேன். அதன் பின்னர் நடந்ததும் எல்லாம் அனைவருக்கும் தெரியும்.

இந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக நான்காண்டுகள் இருந்த என்னை பொதுக்குழுக் கூட்டத்தில் பேசவிடாமல் தடுத்தும், குண்டர்கள், ரௌடிளை வைத்து அராஜகம் செய்தார்கள். அதனை இந்த இயக்கத்தை கட்டிப் காப்பாற்ற போகிறோம் என்று தப்பட்டம் அடிக்கும் தலைமைக் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் என யாரும் தடுக்கவில்லை, கட்டுப்படுத்தவும் இல்லை.
அதனைத் தொடர்ந்து ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இல்லாமல் அவசர அவசரமாக ஜூலை 11-ம் தேதியன்று பொதுக்குழு கூட்டம் என்று மேடையில் அறிவித்தார்கள். ஆனால் அன்றைய பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்காமல் சில மாவட்டச் செயலாளர்கள் தலைமைக் கழக அலுவலகத்தில் இருந்து கொண்டு என்னை உள்ளே விடாமல் தடுப்பதற்காக காத்திருந்தனர்.

அதிமுக தலைமை கழக அலுவலகம் என்ன அவர்கள் அப்பன் வீட்டு சொத்தா, இது தொண்டர்களுடைய சொத்து. கட்சிக்காக ஜானகி அம்மையார் வழங்கினார். மேலும் அலுவலகத்தில் உள்ளே புகுந்தது நான் திருடிச் சென்றதாக கூறுகின்றனர். என் வீட்டில் நான் ஏன் திருடப்போகிறேன்.
மேலும் எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்பு நடைபெற்ற தேர்தலில் போடி தொகுதியில் ஜானகி அணியைச் சேர்ந்த நடிகை நிர்மலாவுக்கு ஏஜென்டாக செயல்பட்டதாகக் கூறுகின்றனர். உண்மையிலேயே அப்போது போடி தொகுதியில் நிர்மலாவுக்கு ஏஜென்டாக வழக்கறிஞர்களான ஜெயக்குமார், ராஜ்மோகன் ஆகியோர் தான் பணிபுரிந்தனர். நான் பணிபுரிந்தேன் என, என்மீது ஏதாவது குறை சொல்ல வேண்டும் என்பதற்காக பேசி வருகிறார்கள்.

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வின் தோல்வி குறித்து தலைமைக் கழகத்தில் கூட்டம் நடைபெற்றது. அப்போது நான் உள்பட அமைச்சர்கள் 10 பேர் ராஜினாமா செய்து விட்டு ஒவ்வொருவரும் தலா 4 அல்லது 5 மாவட்டங்களில் கட்சி வேலை செய்து மீண்டும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவோம் எனக் கூறினேன். அதற்கு யாரும் முன்வரவில்லை. 2008 முதல் நடைபெற்ற அனைத்து சட்டமன்ற இடைத்தேர்தலிலும் கட்சியின் தேர்தல் பொறுப்பாளராக ஜெயலலிதா என்னை நியமித்தார்.

பதவி ஆசை பிடித்தவர் என என்னைச் சொல்லும் எடப்பாடி பழனிச்சாமி தனது பதவியை ராஜினாமா செய்யத் தயாரா? நானும் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன். மக்களை சந்திப்போம் யாருக்கு ஆதரவு இருக்கிறது எனத் தெரியவரும்” என ஆதரவாளர்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமிக்கு சவால் விடுத்துள்ளார் ஓ.பி.எஸ்.