காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர், காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர், காங்கிரஸின் G-23 குழுவின் உறுப்பினர், மத்திய அமைச்சர், இந்திய காங்கிரஸ் கட்சியின் அரசியல் விவகாரக்குழு உறுப்பினர் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளை வகித்தவர் குலாம் நபி ஆசாத். அண்மைக்காலமாகவே காங்கிரஸ் மேலிடத்துடன் அதிருப்தியில் இருந்துவந்த அவர், அந்தக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தான் விலகுவதாகவும், புதிய கட்சி தொடங்கும் திட்டத்தையும் அறிவித்திருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ், ‘குலாம் நபி ஆசாத் பா.ஜ.க-வால் கட்டுப்படுத்தப்படுகிறார்’ என விமர்சித்திருந்தது.

இந்த நிலையில், முன்னாள் காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, “2006 காஷ்மீரில் நான் முதலமைச்சராக இருந்தபோது குஜராத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் சிலர் கையெறி குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தனர். அப்போது குஜராத் முதல்வராக இருந்த மோடி, என்னுடைய அலுவலகத்துக்குப் போன் செய்தார். அப்போது நான், ‘இந்த தாக்குதல் எவ்வளவு கொடூரமான செயல்’ என்று கதறி அழுதுக்கொண்டிருந்தேன். அதனால், அவருடன் என்னால் பேச முடியவில்லை. என்னுடைய ஊழியர்கள் தொலைபேசியை என்னிடம் கொண்டு வந்தபோது நான் அழுவதை அவர் கேட்டார்.

மோடி ஒரு முரட்டுத்தனமான மனிதராக இருக்க வேண்டும். ஏனென்றால், அவருக்கு மனைவி, குழந்தைகள் இல்லாததால் அவர் எதைப்பற்றியும் கவலைப்படமாட்டார் என்று நான் நினைத்தேன். ஆனால், அவர் மனிதாபிமானம் உள்ளவர். பா.ஜ.க-வுடன் எந்தக் கூட்டணியும் செய்துக்கொள்ளப்போவதில்லை. பா.ஜ.க-வுக்கும் எனக்கும் வெவ்வேறு வாக்கு வங்கிகள் உள்ளன. எனவே ஒன்றாகச் செயல்படுவது என்ற பேச்சுக்கே இடமில்லை” எனத் தெரிவித்திருக்கிறார்.