கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரத்தில் உள்ள இளமையாக்கினார் கோவில் தெருவில் வசிக்கும் பச்சையப்பன், தாமோதரன், லஷ்மி, பேபி சந்திரா உள்ளிட்ட 7 குடும்பங்களைச் சார்ந்தவர்களின் வீடுகளுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன் மின் இணைப்பு வழங்கப்பட்ட நிலையில், அந்த இடம் லால்கான் பள்ளிவாசலுக்கு சொந்தமானது என எதிர்ப்பு தெரிவித்து, மேலும் கொடுக்கப்பட்ட மின் இணைப்பை துண்டிக்க வேண்டும் என மின்வாரியத்திற்கு லால்கான் பள்ளிவாசல் நிர்வாகம் கடிதம் அளித்துள்ளது.
இந்நிலையில் பல கட்ட எதிர்ப்புக்கு இடையே திங்கள்கிழமை மின்துறை உதவி பொறியாளர் கார்த்தி மற்றும் மின் துறையினர் சிதம்பரம் காவல்துறையினரின் உதவியுடன் சம்பந்தப்பட்ட வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிக்க வந்த நிலையில், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மின்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பொதுமக்கள் இது அரசுக்குச் சொந்தமான இடம். நீதிமன்ற தீர்ப்பு படி இந்த இடம் பள்ளிவாசலுக்கு உரியது என்றால் ஆவணம் இருந்தால் காண்பித்துவிட்டு மின் இணைப்பு துண்டிக்க வாருங்கள் என்று வாக்குவாதம் செய்தனர்.
இதனையறிந்த அப்பகுதியின் நகர்மன்ற உறுப்பினர் ஜேம்ஸ் விஜயராகவன் இருதரப்பினரையும் சமாதனம் செய்த பிறகு காவல்துறை மற்றும் மின்துறையினர் திரும்பி சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.