ராஞ்சி: ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் பதவி பறிப்பு குறித்து முடிவெடுப்பதில் ஆளுனர் தாமதப்படுத்துவதால் குதிரை பேரம் நடக்க வாய்ப்பு உள்ளது என்று ஐமு கூட்டணி கட்சிகள் அச்சம் தெரிவித்துள்ளன. சுரங்க ஒதுக்கீடு ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா(ஜேஎம்எம்) தலைவரும், முதல்வருமான ஹேமந்த் சோரனை எம்எல்ஏ பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ய ஆளுநருக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இதனால், சோரனின் பதவிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆளுனர் தனது முடிவை நேற்று (திங்கள்கிழமை) அறிவிப்பார் என்று தகவல்கள் வந்தன.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஜேஎம்எம், காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தள கட்சி கட்சி தலைவர்கள் நேற்று ஆலோசனையில் ஈடுபட்டனர். அதன் பின்னர் மாநில அமைச்சர் சம்பை சோரன் கூறுகையில்,‘‘ ஹேமந்த் சோரனின் பதவியை பறிப்பது குறித்து தேர்தல் ஆணையத்திடம் இருந்து அறிக்கை வந்தால் அதை பற்றி ஆளுனர் வெளிப்படையாக முடிவை அறிவிக்க வேண்டும். இதில் ஏற்பட்டுள்ள குழப்பத்தால் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன’’ என்றார்.
காங்கிரசை சேர்ந்த அமைச்சர் பன்னா குப்தா பேசுகையில்,‘‘ ஆளும் கூட்டணி எந்த ஒரு சூழலையும் சந்திக்க தயாராக உள்ளது. ஆளுனர் குழப்பத்தை தவிர்க்க வேண்டும்’’ என்றார். ஐமு கூட்டணி எம்எல்ஏக்கள் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில், முடிவை அறிவிப்பதில் ஏற்படும் தாமதத்தால், எம்எல்ஏக்கள் குதிரை பேரம் நடப்பதற்கு ஆளுனர் மாளிகை விரும்புகிறதா. இது குறித்து சட்ட வல்லுனர்கள் அவருக்கு அளித்த ஆலோசனைகள் என்ன?இது ஜனநாயகத்துக்கு ஏற்பட்ட அவ மானம் ஆகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.