பெரியகுளம்: பதவி ஆசை இல்லாத என்னை அதற்கு ஆசைப்படுவதாக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கூறுகின்றனர். வேண்டுமானால் கட்சி பதவியை நான் ராஜினாமா செய்கிறேன். அதேபோல் எடப்பாடி பழனிசாமியும் ராஜினாமா செய்துவிட்டு தொண்டகளை சந்திக்க தயாராக இருக்கிறாரா என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சவால் விடுத்துள்ளார்.
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே நடைபெறும் உட்கட்சி பூசல் உச்சத்தை அடைந்துள்ளது. இந்நிலையில் தேனி மாவட்டம், பெரியகுளத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தை, மதுரை முன்னாள் எம்.பி கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் நேற்று சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். அவர்களிடம் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:
எடப்பாடிக்கு வரவேற்பு கொடுத்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தி என்னை பொதுகுழுவில் கலந்து கொள்ளவிடாமல் சதி செய்யப்பட்டது. அதிமுக தலைமை கழகம் எடப்பாடி பழனிசாமியின் அப்பன் வீட்டு சொத்து அல்ல. தலைமைக் கழகம் எனது வீடு. என் வீட்டில் நான் திருடுவேனா? எம்பி தேர்தலில் நாம் தோல்வி அடைந்தபோது 10 அமைச்சர்கள் ராஜினாமா செய்துவிட்டு தமிழகம் முழுவதும் தொகுதிகளில் கட்சி வேலை பார்க்க வலியுறுத்தினேன். யாரும் கேட்கவில்லை.
பதவி ஆசை இல்லாத என்னை அதற்காக ஆசைப்படுபவன் என்று கூறுகிறார்கள். வேண்டுமானால், கட்சி பதவியை நான் ராஜினாமா செய்கிறேன். எடப்பாடி பழனிசாமியும் ராஜினாமா செய்யட்டும். இருவரும் தொண்டர்களை சந்திப்போம். அவர்கள் மத்தியில் யாருக்கு செல்வாக்கு இருக்கிறது என்று பரிசோதித்து பார்க்கலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.