லாகூர்,
பாகிஸ்தானில் தென்மேற்கு பருவமழையையொட்டி கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் மழைப்பொழிவு ஏற்பட்டு உள்ளது. இதனால், நாடு முழுவதும் வெள்ளம் சூழ்ந்து உள்ளது. வெள்ளம் அதிகம் பாதித்த 110 மாவட்டங்களில் சுமார் 57 லட்சம் பேர் தங்குமிடம் மற்றும் உணவு இல்லாமல் உள்ளனர்.
இதன் காரணமாக அங்கு பல்வேறு காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை ஏற்றம் கண்டுள்ளது. பலுசிஸ்தான், சிந்து மற்றும் தெற்கு பஞ்சாப் ஆகிய பகுதிகளில் காய்கறிகள் விநியோகம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்தியாவில் இருந்து வெங்காயம், தக்காளி போன்ற காய்கறிகளை பாகிஸ்தான் அரசு இறக்குமதி செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது
இந்த நிலையில் இந்தியாவிலிருந்து காய்கறிகள் இறக்குமதி செய்வது குறித்து பாகிஸ்தான் அரசாங்கம் விரைவில் பரிசீலிக்கலம் என அந்த நாட்டின் நிதி மந்திரி இஸ்மாயில் இன்று தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர் கூறுகையில், “சமீபத்திய வெள்ளத்தால் நாடு முழுவதும் பயிர்கள் நாசமாகியுள்ளது. இதனால் மக்களுக்கு வசதியாக காய்கறிகள் மற்றும் இதர உண்ணக்கூடிய பொருட்களை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கலாம் ” என தெரிவித்துள்ளார்.
மூன்று ஆண்டுகளுக்குப் முன் காஷ்மீர் பிரச்சினைக்காக இந்தியா உடனான வர்த்தக உறவுகளை பாகிஸ்தான் குறைத்து கொண்டது குறிப்பிடத்தக்கது.