துபாய்,
ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட்டில் துபாயில் நேற்று இரவு அரங்கேறிய 2-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் (ஏ பிரிவு) மோதின. இந்த போட்டியில் இந்திய அணி ஹர்திக் பாண்டியாவின் சிறப்பான ஆட்டத்தால் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சில நாட்கள் ஓய்வுக்கு பிறகு நேற்றைய போட்டியில் களமிறங்கிய விராட் கோலி 34 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரோகித் சர்மாவும் சோபிக்க தவறினார்.
இவர்களின் ஆட்டம் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து கவாஸ்கர் கூறியதாவது:-
ராகுல் ஒரே ஒரு பந்தைதான் எதிர் கொண்டார். அதனால் எதையும் தீர்மானிக்க முடியாது. ரோகித்தும் கோலியும் சிறிது நேரம் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் கணிசமான ரன்களைப் பெற்றனர். இதற்கு முன்பு கோலியின் ஃபார்ம் பற்றி மக்கள் பேசும் போது அவருக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று கூறிக்கொண்டே இருந்தேன்.
ஆனால் இந்த போட்டியில் அவருக்கு அதிர்ஷ்டம் இருந்தது. கேட்ச் தவறியது. நிறைய இன்சைட் எட்ஜ்கள் என வந்த போதும் நல்ல ஷாட்கள் நிறைய ஆடினார்.
கோலி – ரோகித் தங்களுக்கு கிடைத்த சிறப்பான தொடக்கத்தை 60 – 70 ரன்களுக்கு மாற்றியிருக்க வேண்டும். ஆனால் மோசமான ஷாட்களால் சொதப்பினர். அது போன்ற சூழலில் பெரிய ஷாட்கள் தேவையே கிடையாது. ரன் ரேட் 19 – 20 என தேவைப்பட்டிருந்தால் சிக்ஸர் அடிக்கலாம். இனி வரும் போட்டிகளில் இதனை கற்றுக்கொள்வார்கள் என நினைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.