புதுடெல்லி: முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலங், செப்டம்பர் 3வது வாரத்தில் நடக்கும் என்று ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. முதுகலை மருத்துவ படிப்புக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்-பிஜி) ஜனவரியில் நடத்தப்பட்டு, மார்ச் மாதத்தில் கவுன்சிலிங் தொடங்கும். ஆனால் கொரோனா தொற்று மற்றும் கடந்த ஆண்டு சேர்க்கை செயல்முறை தாமதம் காரணமாக, இந்த ஆண்டு தேர்வு கடந்த மே 21 அன்று நடத்தப்பட்டு ஜூன் 1 அன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, செப்.1ம் தேதி முதல் முதுநிலை மருத்துவ படிப்புக்கான கவுன்சிலங்கை தொடங்க திட்டமிட்டப்பட்டிருந்தது.
ஆனால், தேசிய மருத்துவ ஆணையம் நடப்பு கல்வியாண்டிற்கான புதிய அனுமதி கடிதங்களை வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதனால், முதுநிலை மருத்துவ படிப்புக்கான கவுன்சிலங் செப்டம்பர் 3வது வாரத்தில் நடக்கும் என்று ஒன்றிய சுகாதார அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘இந்த ஆண்டு முதுகலை கவுன்சிலிங் சுமார் 52,000 இடங்களுக்கு நடைபெற உள்ளது. அனைத்து மத்தியப் பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அகில இந்திய ஒதுக்கீட்டில் 50 சதவீதம் மற்றும் மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் மாநில ஒதுக்கீட்டில் 50 சதவீதமும் ஒரே நேரத்தில் முதுகலை கவுன்சிலிங் தொடங்கும்’ என்றனர்.