சென்னை: தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் கடந்த கல்வி ஆண்டைவிட நடப்பு ஆண்டில் குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இயங்கி வரும் சிறுபான்மையற்ற சுயநிதி தனியார் பள்ளிகளில் இலவச கட்டாய கல்விஉரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான கல்விக் கட்டணங்களை மாநில அரசே செலுத்தி வருகிறது.
இந்த மாணவர்களுக்கான கட்டணம் என்பது அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்காக செலவிடப்படும் தொகையை அடிப்படையாக கொண்டு நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. பள்ளிக் கல்வித்துறையால் ஒரு மாணவனுக்கு செலவிடப்படுவதாக அறிவிக்கப்படும் தொகையை தனியார் பள்ளிக்கும் அளித்து வருகிறது. இதன்படி, கடந்த 2020-21ம் கல்வி ஆண்டில் எல்கேஜி, யுகேஜி, 1ம் வகுப்புகளுக்கு ஒரு மாணவனுக்கு ரூ.12458.94, 2ம் வகுப்புக்கு ரூ.12449.15, 3ம் வகுப்புக்கு ரூ.12578.98, 4ம் வகுப்புக்கு ரூ.12584.83, 5ம் வகுப்புக்கு ரூ.12831.29, 6ம் வகுப்புக்கு ரூ.17077.34, 7ம் வகுப்புக்கு ரூ. 17106.62, 8ம் வகுப்புக்கு ரூ. 17027.35 என நிர்ணயம் செய்யப்பட்டு கட்டணம் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், நடப்பு 2021-22ம் கல்வி ஆண்டில் எல்கேஜி, யுகேஜி மற்றும் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை ஒரு மாணவனுக்கு ரூ. 12076.85, 6, 7, 8ம் வகுப்புக்களுக்கு ரூ.15711.31 என தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டுக்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.