சென்னை: மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் கட்டிட அனுமதிக்கு மாறாகவோ, அனுமதியின்றியோ கட்டிடம் கட்டினால் நடவடிக்கை எடுக்கும்படி, நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு நகராட்சி நிர்வாக இயக்குநர் பா.பொன்னையா அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் பல்வேறு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், குடியிருப்பு மற்றும் வணிகக் கட்டிட அனுமதிகளில் விதிகள் முறையாகப் பின்பற்றப்படுவதில்லை என்று, பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், பல்வேறு அமைப்புகள் சார்பில் அரசுக்குப் புகார்கள் வந்தன.
இந்நிலையில், நகராட்சி நிர்வாகத் துறைச் செயலர் சிவ்தாஸ் மீனா, ஒருங்கிணைந்த கட்டிட விதிகளைப் பின்பற்றி அனுமதி வழங்குமாறு நகர்ப்புற உள்ளாட்சிகளுககு அறிவுறுத்தும்படி, நகராட்சி நிர்வாக இயக்குநர், பேரூராட்சிகளின் ஆணையர் ஆகியோருக்கு அறிவுறுத்தினார்.
இது தொடர்பாக, மாநகராட்சிகள், நகராட்சிகளுக்கு, நகராட்சி நிர்வாக இயக்குநர் பா.பொன்னையா அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: உள்ளாட்சிப் பகுதிகளில் அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில்,கட்டிட விதிகள் மற்றும் அனுமதி வழங்கும் வழிமுறைகள் உருவாக்கப்பட்டு, ‘தமிழ்நாடு ஒருங்கிணைந்த அபிவிருத்தி மற்றும் கட்டிட விதிகள்’ கடந்த 2019 பிப். 4-ம் தேதி முதல் அமலுக்கு வந்தன.
அதன் அடிப்படையில், அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் கட்டிட அனுமதி வழங்கும் நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், உள்ளாட்சி அமைப்புகளில் கட்டப்படும் குடியிருப்பு மற்றும் வணிகக் கட்டிடங்களுக்கு கட்டிட அனுமதி வழங்குவதில் கட்டிட விதிகள் முறையாகப் பின்பற்றப்படாமல் வழங்குவதாக, பொதுமக்கள் மற்றும் பல்வேறு சமூக ஆர்வலர்களிடம் இருந்தும் புகார் வருவதாக, கடந்த ஆக.17-ம் தேதி வந்த அரசு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டிட அனுமதி வழங்குவதில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த அபிவிருத்தி மற்றும் கட்டிட விதிகளைப் பின்பற்றுமாறு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுரை வழங்குமாறும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, நகர்ப்புற உள்ளாட்சிகளில் கட்டிட அனுமதி வழங்குவதில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து அறிவுரை வழங்கப்படுகிறது. அதன்படி, தமிழ்நாடு ஒருங்கிணைந்த அபிவிருத்தி மற்றும் கட்டிட விதிகளின்கீழ், கட்டிட அனுமதி வழங்குவது தொடர்பான விதி 6,10,15 மற்றும் இதர விதிகளை முறையாகப் பின்பற்ற வேண்டும்.
புதிதாக கட்டிடப் பணி தொடங்கும் இடங்களை ஆய்வுசெய்து, முறையான அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பதை நகரமைப்பு அலுவலர், ஆய்வாளர் உறுதி செய்ய வேண்டும். கட்டிட அனுமதி வழங்கியபின், உரிய காலஇடைவெளியில் ஆய்வுசெய்து, கட்டிட அனுமதியின்படிதான் கட்டிடங்கள் கட்டப்படுகிறதா என்பதை உறுதி செய்யவேண்டும்.
முறையான அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டுவது கண்டறியப்பட்டால், ஆரம்ப கட்டத்திலேயே தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, கட்டிட அனுமதிக்கு மாறாக கட்டிடங்கள் கட்டுவது கண்டறியப்பட்டாலோ, தவறான ஆவணங்கள் அடிப்படையில் அனுமதி பெற்றுள்ளதாக தெரியவந்தாலோ, வழங்கப்பட்ட கட்டிட அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.
அனுமதியற்ற, அனுமதிக்கு மாறான கட்டுமானங்கள் மீது சட்டரீதியான அமலாக்க நடவடிக்கை எடுப்பதுடன், நகராட்சி மற்றும் மாநகராட்சி சட்ட விதிகளில் குறிப்பிட்டுள்ளபடி குற்றவியல் நடவடிக்கை உட்பட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும்.
அனைத்து நகராட்சிகளின் நகரமைப்பு ஆய்வாளர்கள், அலுவலர்கள் மற்றும் மாநகராட்சிகளின் இளநிலைப் பொறியாளர்கள், செயற் பொறியாளர்கள் இதை தவறாமல் பின்பற்ற வேண்டும். மாநகராட்சி, நகராட்சி ஆணையர்கள் இவற்றை உரிய முறையில் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், பேரூராட்சிகளுக்கும் அதன் ஆணையர் தக்க அறிவுரைகளை வழங்கியுள்ளார்.