புதுடெல்லி: விவசாயிகள் போராட்டம் தொடர்பான பின்னணியை ஆராய என்ஐஏ விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் ஓராண்டாக போராட்டம் நடத்தினர். அந்த போராட்டமானது, சில இடங்களில் வன்முறையாகவும் மாறியது. இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தின் பின்னணியில் வெளிநாட்டு சதி உள்ளது.
அந்நிய நாடுகளில் இருந்து சட்டவிரோதமான முறையில் பணம் வந்துள்ளது. ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் உள்ளவர்களை அடையாளம் காணும் வகையில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார். இம்மனு நீதிபதி தினேஷ் மகேஸ்வரி அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘நீதித்துறையின் செயல்பாடுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். ஏற்கனவே இந்த விசயத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு விசாரித்து வருகிறது. உங்களது கற்பனைகளை மனுவாக தாக்கல் செய்ய வேண்டாம்’ எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.