பாரீஸ்: பறக்கும் விமானத்தில் துணை விமானியுடன் விமானி கைகலப்பில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து நடந்த விசாரணையில் 2 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
கடந்த ஜூன் மாதம் ஏர் பிரான்ஸ் விமானம் ஒன்று ஜெனீவா-பாரீஸ் இடையே பறந்துகொண்டிருந்தது. அப்போது விமானத்தை இயக்கிக் கொண்டிருந்த விமானியும், துணை விமானியும் சட்டைக் காலரைப் பிடித்துக் கொண்டு சண்டையிட்டுக் கொண்டனர். இதில் ஒருவர் மற்றொருவரை அடித்ததாகக் கூறப்படுகிறது. எதற்காக இந்த சண்டை நடந்தது என்று தெரியவில்லை. காக்-பிட் அறையிலேயே இந்த சண்டை நடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இருந்தபோதும் விமானம் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட விமானிகளிடம் ஏர் பிரான்ஸ் விமான நிறுவன அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் என்று நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளதாக அங்கிருந்து வெளியாகும் லா டிரிபியூன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. பிரான்சின் விமான விசாரணை நிறுவனமான பிஇஏ, ‘ஏர் பிரான்ஸ் விமானிகள் சிலர் பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு மதிப்பளிப்பதில்லை’ என அறிக்கை ஒன்றை வெளியிட்ட பின்னரே காக்-பிட் அறையில் விமானிகளுக்கு இடையே நடந்த இந்த சண்டை வெளியே தெரியவந்தது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பாதுகாப்பு தணிக்கையை மேற்கொன்டு வருவதாக ஏர் பிரான்ஸ் தெரிவித்துள்ளது. மேலும், பிஇஏ-வின் பரிந்துரைகளை பின்பற்றுவதாகவும் அந்நிறுவனம் உறுதி அளித்து உள்ளது.