1400 கோடி ரூபாய் மோசடி? டெல்லி ஆளுநருக்கு எதிராக வலுக்கும் போராட்டம்!

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள டெல்லி துணை நிலை ஆளுநர் பதவி விலக கோரி, ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் டில்லி சட்டமன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

டெல்லியின் துணை நிலை ஆளுநராக இருப்பவர் வி.கே. சக்சேனா. இவர் 2016ஆம் ஆண்டு பணமதிப்பழிப்பு நடவடிக்கை நடந்த போது காதி கிராம தொழில் ஆயைணத்தின் தலைவராக இருந்தார். அப்போது 1400 கோடி ரூபாய் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றினார் என புகார் எழுந்துள்ளது.

இது குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால் நேற்று சட்டமன்றத்துக்குள் தங்கும் போராட்டத்தை ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் தொடங்கினர். சட்டமன்ற வளாகத்திலும் நேற்று இரவு போராட்டத்தை தொடர்ந்த அவர்கள் பாடல் பாடிய படியும், கோஷங்கள் எழுப்பிய படியும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இது குறித்து ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர் துர்கேஷ் பதக் செய்தியாளர்களிடம் கூறிய போது, “கடந்த 2016இல் காதி கிராம தொழில் ஆயைணத்தின் தலைவராக இருந்த சக்சேனா மீது ஊழல் புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே ஊழல் குற்றச்சாட்டிற்குள்ளானவர் கவர்னராக இருக்க தகுதியில்லை. அவர் பதவி விலகும் வரை டெல்லி சட்டசபையில் தங்கும் போராட்டத்தை இன்று துவக்கியுள்ளோம்” என்று கூறினார்.

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது அமலாக்கத்துறை பண மோசடி வழக்குபதிந்துள்ளது. அதற்கு ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனா மீது அமலாக்கத்துறையோ, சிபிஐயோ ஏன் வழக்கு பதிவு செய்து விசாரிக்கவில்லை என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதனால் ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர் சவுரபா பரத்வாஜ் தலைமையில் ஆம் ஆத்மி சட்டமன்றத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.