லாகூர்: பாகிஸ்தானில் ஒரு கிலோ தக்காளி ரூ.500-க்கும் ஒரு கிலோ வெங்காயம் ரூ.400-க்கும் விற்கப்படுகிறது. பற்றாக்குறையை சமாளிக்க இந்தியாவில் இருந்து தக்காளி, வெங்காயத்தை இறக்குமதி செய்ய அந்த நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாதம் பருவமழை தொடங்கியது. பருவநிலை மாறுபாடு காரணமாக அந்த நாட்டில் கடந்த 3 மாதங்களாக கனமழை பெய்து வருகிறது. பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான் மாகாணங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. மழை காரணமாக இதுவரை 1,128 பேர் உயிரிழந்துள்ளனர். 8 லட்சத்துக்கும் மேற்பட்ட கால்நடைகளும் உயிரிழந்துள்ளன. 3 லட்சம் வீடுகள் இடிந்துள்ளன. 3,000 கி.மீ. தொலைவுக்கு சாலைகள் சேதமடைந்துள்ளன. 200-க்கும் மேற்பட்ட பாலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன. சுமார் 4 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். மழையால் இதுவரை ரூ.7.98 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. மழை, வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
30 சதவீதம் பாதிப்பு
பாகிஸ்தான் வேளாண் சாகுபடியில் சுமார் 30 சதவீதத்துக்கும் அதிகமாக பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதன்காரணமாக கோதுமை, காய்கனிகளுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக தக்காளி, வெங்காயம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. பாகிஸ்தானின் கராச்சி சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.500-க்கும் (இந்திய மதிப்பில் ரூ.179.76), ஒரு கிலோ வெங்காயம் ரூ.400-க்கும் (இந்திய மதிப்பில் ரூ.143.81) விற்கப்படுகிறது.
ரூ.700-ஐ தாண்டும்
அடுத்த சில வாரங்களில் ஒரு கிலோ தக்காளி ரூ.700-ஐ தாண்டக்கூடும் என்று வியாபாரிகள் கூறுகின்றனர். உருளைக்கிழங்கு, பீன்ஸ், அவரை, வாழைப்பழம் உட்பட அனைத்து காய்கனிகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. தற்போது ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானுக்கு காய்கனிகள் கொண்டு வரப்படுகின்றன. ஆனால் வரத்து குறைவாக இருப்பதால் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியாவில் இருந்து தக்காளி, வெங்காயம் மற்றும் காய்கனிகளை இறக்குமதி செய்ய பாகிஸ்தான் அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சரக்கு போக்குவரத்து
பருவமழை குறைந்து வேளாண் சாகுபடி தொடங்கிய பிறகே பாகிஸ்தான் சந்தைகளுக்கு காய்கனிகளின் வரத்து அதிகரிக்கும். அதோடு துண்டிக்கப்பட்ட சாலைகளை சீரமைத்த பிறகே சரக்கு போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பி காய்கனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை குறையும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ஐ.நா.வின் உலக உணவு திட்ட அமைப்பு வட்டாரங்கள் கூறும்போது, பாகிஸ்தானில் 22 கோடி மக்கள் வசிக்கின்றனர். மழை காரணமாக அந்த நாட்டில் சுமார் 3.3 கோடி பேர் உணவு தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தன.