எடப்பாடி பதவியும், 10 அமைச்சர்கள் ராஜினாமாவும்… ஓபிஎஸ் விட்ட சவால்!

அதிமுகவில் உட்கட்சி பூசல் தொடர்ந்து சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. எடப்பாடி பழனிசாமிக்கு பெருவாரியான பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு இருக்கும் நிலையில், நீதிமன்ற தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வத்திற்கு சாதகமாக வந்துவிட்டது. இதனால் கட்சி தன்பக்கம் வந்துவிடும் என்ற எண்ணத்தில் அடுத்தகட்ட நகர்வுகளில் கவனம் செலுத்தி வருகிறார்

.

தற்போது சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள பண்ணை வீட்டில் தங்கியுள்ள நிலையில், ஆதரவாளர்கள் பலரும் தினசரி நேரில் வந்து நம்பிக்கை அளித்து வருகின்றனர். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட கழகத்தினர் பெரியகுளத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை நேற்று நேரில் சந்தித்தனர்.

இதனைத் தொடர்ந்து மதுரை புறநகர் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள், திருமங்கலம் தொகுதியை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் என நூற்றுக்கணக்கானோர் ஓபிஎஸ்சை சந்தித்து மாலை அணிவித்து ஆதரவை வெளிப்படுத்தினர். இவர்கள் மத்தியில் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கவுரமான அதிமுக பொதுக் குழுவில் சி.வி.சண்முகம் செய்தது மிகவும் கேலிக்கூத்தான செயல்.

எடப்பாடிக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தி விட்டு, தன்னை பொதுக்குழுவில் கலந்து கொள்ள விடாமல் சதி செய்திருக்கின்றனர். அதிமுக தலைமை கழகம் எடப்பாடி பழனிசாமியின் அப்பா வீட்டு சொத்தா? அதுவும் என் வீட்டில் நான் திருடுவேனா? தலைமை கழகம் எனது வீடு. என் மீது அபாண்டமாக பழி போடுவதாக தெரிவித்தார்.

அதிமுகவில் மட்டுமே தொண்டர்கள் தலைமை பதவிக்கு வர முடியும். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த போது 10 அமைச்சர்கள் ராஜினாமா செய்யுமாறு அறிவுறுத்தினேன். ராஜினாமா செய்து விட்டு தொகுதியில் கட்சி வேலை பார்க்க வலியுறுத்தினேன். நான் பேச ஆரம்பித்தால் அவ்வளவு விஷயம் இருக்கிறது. நான் பேசினால் யாரும் பேச முடியாது. 13 ஆண்டுகளுக்கு பிறகு என்னை தான் முதல்வராக ஆக்கினார் ஜெயலலிதா.

முதலமைச்சராகும் எண்ணம் இல்லை – ஓபிஎஸ் அதிரடி

எடப்பாடி ராஜினாமா செய்யட்டும். நானும் ராஜினாமா செய்கிறேன். கீழே போய் தொண்டர்களை சந்திப்போம். அவர்கள் முடிவு செய்யட்டும். யார் தலைமை பொறுப்பிற்கு வர வேண்டும் என்று. பதவி ஆசை இல்லாத என்னை பதவி ஆசை உள்ளவன் எனக் குற்றம்சாட்டுகிறார்கள். அதிமுகவின் தொண்டர்களுக்கு என்னைப் பற்றி நன்கு தெரியும். கழகத்தின் எதிர்காலத்தை அவர்களே முடிவு செய்வார்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.