சேலம்: மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகமாக இருப்பதால், அணையில் இருந்து விநாடிக்கு 1.30 லட்சம் கனஅடி வீதம் நீர் வெளியேற்றப்படுகிறது.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துள்ள கனமழையால், மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கும் நீரின் அளவு விநாடிக்கு 1.30 லட்சம் கனஅடியாக நேற்று அதிகரித்தது. இதைத் தொடர்ந்து, அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் விநாடிக்கு 1.30 லட்சம் கனஅடியாக நேற்று நண்பகலில் இருந்து அதிகரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, அணையின் நீர் மின் நிலையங்கள் வழியாக, விநாடிக்கு 23,000 கனஅடியும், 16 கண் மதகு வழியாக, விநாடிக்கு 1.07 லட்சம் கனஅடியும் என மொத்தம் 1.30 லட்சம் கனஅடி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, காவிரி கரையோர மாவட்டங்களில், வெள்ள அபாயம் தொடர்கிறது.
மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கும் நீரின் அளவு அபாய நிலையில் இருப்பதால், அணையில் நீர்வளத்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். இதற்கிடையே, தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று மாலை விநாடிக்கு 1 லட்சத்து 8,000 கனஅடியாக நீர் வரத்து குறைந்தது.மேட்டூர் அணையின் 16 கண் மதகு வழியாக பெருக்கெடுத்து ஓடி வரும் காவிரி.