பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளையும் உள்ளடங்கிய தேசிய சபை ஒன்றை அமைப்பதற்கான நகல் சட்டமூல வரைவுக்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் தினேஷ் குணவர்த்தன , இதுதெடர்பான நகல் சட்டமூலத்தை கட்சித்தலைவர்களிடம் முன்வைத்துள்ளார். பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் நேற்று இடம்பெற்ற கட்சித்தலைவர்களின் கூட்டத்தில் இது சமர்ப்பிக்கப்பட்டது.
பாராளுமன்றத்தின் துறைசார் கண்காணிப்பு நிறைவேற்றுக்குழுக்களை அமைப்பது தொடர்பில் அரசாங்கம் முன்வைத்துள்ள யோசனை குறித்தும் அங்கு கலந்துரையாடப்பட்டது. இதன்போது கட்சித்தலைவர்கள் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தனர்.
பாராளுமன்றத்தில் கட்சிகளின் பொது இணக்கப்பாட்டுடன் கொள்கையளவிலான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு வழிகாட்டுவது இந்த தேசிய சபையின் நோக்கமாக இருக்க வேண்டும் என கட்சித்தலைவர்கள் குறிப்பிட்டனர்.
தேசிய சபை மற்றும் துறைசார் கண்காணிப்பு நிறைவேற்றுக்குழுக்கள் பற்றி அரசாங்கம் முன்வைத்துள்ள யோசனை தொடர்பில் அந்தந்த கட்சிகளின் கருத்துக்களை விரைவில் எழுத்து மூலம் பெற்றுக்கொள்ளவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
இந்த கருத்துக்களுடன் விரிவுபடுத்தப்பட்ட புதிய நகல் சட்டமூலம் பிரதமர் தலைமையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இடம்பெறும் கட்சித்தலைவர்களின் கூட்டத்தின் போது முன்வைக்கப்படும். 17 துறைசார் கண்காணிப்பு நிறைவேற்று குழுக்களையும் தற்போதுள்ள 12 நிலையியல் நிறைவேற்று குழுக்களுடன் மேலும் மூன்று குழுக்களை அமைப்பது தொடர்பிலும் அரசாங்கம் யோசனை முன்வைத்துள்ளது.
நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் கட்சிகள், தொழிலாளர் காங்கிரஸ், ஐக்கிய தேசிய கட்சி, ஈபிடிபி,தேசிய காங்கிரஸ் ஆகியகட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.