டெல்லி சட்டப்பேரவையில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கொண்டுவந்த நம்பிக்கை கோரும் தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும், எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாவுக்கும் மோதல் போக்கு வலுத்து வரும் நிலையில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை வளைத்து ஆட்சியை கலைக்க பாரதிய ஜனதா சதி செய்வதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டி வருகிறார். இந்நிலையில், டெல்லி சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டம் 2 ஆவது நாளாக சமீபத்தில் கூடியது. அப்போது பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 8 பேரும் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா பதவி விலகக்கோரி பதாகைகளை ஏந்திவந்தனர்.
தொடர்ந்து அவையில் பாஜகவினர் அமளியில் ஈடுபட்டனர். அதே நேரத்தில் டெல்லி துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா பதவி விலக வலியுறுத்தி ஆளும்கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி சட்டமன்றத்தில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார்.
70 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபையில் ஆம் ஆத்மி கட்சிக்கு மொத்தம் 62 எம்.எல்.ஏ.க்களும், பா.ஜ.க.வுக்கு 8 எம்.எல்.ஏ. க்களும் உள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு எம்.எல்.ஏ. க்கள் யாரும் கிடையாது. கெஜ்ரிவால் தலைமையிலான அரசு மீது சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், ஆம் ஆத்மியின் 62 எம்எல்ஏக்களும் ஆதரவாக வாக்களிப்பார்களா, யாரும் எதிர்த்து வாக்களிப்பார்களா என்ற கேள்வி அரசியலில் எழுந்துள்ளது.
இதுகுறித்து அரவிந்த் கெஜ்ரிவால் ஊடகங்களில் பேசுகையில், “இந்தியா முழுவதும் இதுவரை 277 எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கியுள்ளது பாஜக. அப்படி எங்கள் சட்டமன்ற உறுப்பினர்களையும் விலைக்கு வாங்க பாஜக முயற்சித்தது. இந்த நம்பிக்கைத் தீர்மானத்தின் மூலம், ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.வை யாரும் விலைக்கு வாங்கவில்லை என்பதை டெல்லிவாசிகளுக்குக் காட்ட விரும்புகிறோம். இதன்மூலம் டெல்லியில் ஆம் ஆத்மி அரசைக் கவிழ்க்கும் `Operation Lotus’ தோல்வியடைந்தது” என்று அவர் கூறினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM