டெல்லி: தற்கொலை, சாலைவிபத்து, சிறுவர்களால் நடத்தப்படும் குற்றச்செயல்களிலும் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது என தேசிய குற்ற ஆவணக்காப்பகம் (NCRB – National Crime Records Bureau) அறிக்கை வெளியிட்டு உள்ளது. கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற விபத்துக்கள் தற்கொலைகள், பெண்கள் மீதான வன்முறைகள் தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நகரங்களின் பட்டியலில் டெல்லி முதலிடத்தில் உள்ளது. அதிக சாலை விபத்துக்கள், தற்கொலைகள், சிறுவர்களால் நடத்தப்படும் குற்றச்செயல்கள் போன்றவற்றில் தமிழ்நாடு 2வது இடத்தை பிடித்துள்ளது.
தற்கொலை:
தேசிய குற்ற ஆவண பிரிவு பதிவு செய்துள்ள தகவல்கள் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு நாடு முழுவதும் 1 லட்சத்து 64 ஆயிரத்து 33 தற்கொலைகள் பதிவாகி உள்ளன. இது முந்தைய ஆண்டை விட 7.2 சதவீதம் அதிகம். தொழில், பணி தொடர்பான பிரச்சினைகள், தனிமை உணர்வு, வன்முறை, குடும்ப பிரச்சினைகள், மனநல பிரச்சினைகள், மதுவுக்கு அடிமை ஆகுதல், நிதி இழப்பு, நீண்டநாள் வலி ஆகியவை தற்கொலைக்கான முக்கிய காரணங்கள் என்று தேசிய குற்ற ஆவண பிரிவு கூறியுள்ளது.
அதிக அளவில் தற்கொலைகள் நடைபெற்றுள்ள மாநிலங்களில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது. அங்கு 22 ஆயிரத்து 207 தற்கொலைகள் நடந்தன. மொத்த தற்கொலையில் இது 13.5 சதவீதம்.
அதையடுத்து, தமிழ்நாடு 2-வது இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு (2021) மட்டும் 18 ஆயிரத்து 925 தற்கொலைகள் நடந்துள்ளது. இது மொத்த தற்கொலையில் இது 11.5 சதவீதம் ஆகும்.
3வது இடத்தில் மத்தியபிரதேசம் (14 ஆயிரத்து 965 தற்கொலைகள்), மேற்கு வங்காளம் (13 ஆயிரத்து 500), கர்நாடகா (13 ஆயிரத்து 56) ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளன. மேற்கண்ட 5 மாநிலங்களில் மட்டும் 50.4 சதவீத தற்கொலைகள் நடந்துள்ளன.
அதிக மக்கள்தொகை கொண்ட உத்தரபிரதேசத்தில் வெறும் 3.6 சதவீத தற்கொலைகள்தான் நிகழ்ந்துள்ளன.
யூனியன் பிரதேசங்களில் டெல்லி முதலிடத்தையும், புதுச்சேரி 2-வது இடத்தையும் பிடித்துள்ளன. 53 பெருநகரங்களில் மட்டும் மொத்தம் 25 ஆயிரத்து 891 தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன.
சாலை விபத்து:
கடந்த ஆண்டில் நடந்த போக்குவரத்து விபத்துகளும், அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளும் அடங்கிய பட்டியலையும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, கடந்த ஆண்டு (2021) நாடு முழுவதும் 4 லட்சத்து 22 ஆயிரத்து 659 போக்குவரத்து விபத்துகள் நடந்துள்ளன. இது முந்தைய ஆண்டை விட (3 லட்சத்து 68 ஆயிரம்) அதிகம்.
அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 24 ஆயிரத்து 711 பேர் மரணம் அடைந்துள்ளனர்
தமிழ்நாடு 16 ஆயிரத்து 685 மரணங்களுடன் 2-ம் இடத்தை பிடித்துள்ளது. இது மொத்த மரணங்களில் 9.6 சதவீதம் ஆகும். தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு மட்டும் சாலை விபத்து வழக்குகள் 22.4% அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில், 2020-ம் ஆண்டு 46 ஆயிரத்து 443 ஆக இருந்த போக்குவரத்து விபத்துகள் எண்ணிக்கை, 2021-ம் ஆண்டில் 57 ஆயிரத்து 90 ஆக அதிகரித்துள்ளது.
3-வது இடத்தில் மகாராஷ்டிரா உள்ளது.
பெண்கள் பாதுகாப்பு:
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நகரங்களின் பட்டியலில் டெல்லி முதலிடத்தில் இருப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. குடெல்லியை அடுத்து மும்பையும், பெங்களூருவும் இடம் பெற்றுள்ளது.
டெல்லியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஓராண்டில் 40 சதவிகிதம் அதிகரித்து 13,890 குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. நாட்டில் அனைத்து பெருநகரங்களிலும் நடக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் டெல்லியின் பங்கு மட்டும் 32.2 சதவிகிதம் ஆகும். கடந்த ஆண்டு டெல்லியில் தினசரி 2 சிறுமிகள் வீதம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருகின்றனர். தலைநகரில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் கடத்தல், கணவரின் கொடுமை, சிறுமி பாலியல் வன்கொடுமை ஆகியவை அதிக இடம் பிடித்துள்ளன.
இதேபோல் சிறுவர்களால் குற்றச்செயல்கள் நடக்கும் அதிகம் நடக்கும் இடங்களில் டெல்லியை தொடர்ந்து சென்னையும் அகமதாபாத்தும் உள்ளன.